Monday, September 30, 2013

பல்துறைக் கலைஞன் சதா பிரணவன் அடுத்த தலைமுறைப் படைப்பாளி

உயிர்வரை இனித்தாயுடன் கைகோர்க்கும் ஓர் உன்னதக் கலைஞன்..
சினிமா தயாரிப்பிற்கு எப்படி பிரான்ஸ் தாய்விடோ அதுபோல புலம் பெயர் தமிழர்களின் திரைப்பட முயற்சிகளுக்கும் தாய்வீடு பிரான்சே என்று கூறுமளவுக்கு அந்த நாட்டில் உள்ள தமிழ் கலைஞர்கள் திரைத்துறைக்கு பணியாற்றியுள்ளார்கள்..
அவர்களுடைய பணிகள் இப்போது புலம் பெயர்ந்த அடுத்த தலைமுறைக் கலைஞர்களாளும் தொடரப்பட்டு வருகிறது.
தற்போது பிரான்சில் திரைப்படத் தயாரிப்பிலும், குறும்படங்களின் உருவாக்கத்திலும் முன்னணி வகிக்கும் சில தாபனங்களில் அவதாரமும் முக்கியமான ஒன்றாகும்.
அவதாரம் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் அவர்களால் செல்லமாக மைக்கல் அண்ணே என்று அழைக்கப்படும் சதா. பிரணவனாகும்.
குறும்படங்களின் இயக்கம், நடிப்பு, கவிதை என்று மாதந்தோறும் ஊடகங்களில் சதா பிரணவன் என்ற பெயரை நாம் சதா கேட்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் அவருடைய இடையறா உழைப்பாகும்.
இப்படி எங்கெல்லாம் ஆர்வமும் செயற்பாட்டு வேகமும் கொண்ட இளைஞர்கள் இருக்கிறார்களோ அவர்களுடன் இணைந்து நடக்கிறது உயிர்வரை இனித்தாய் திரைப்படக் குழு.
இந்தத் திரைப்படத்தில் பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற கலைஞர்களான அப்புக்குட்டி ராஜகோபால், குணபாலன் போன்றவர்கள் நடித்துள்ளார்கள், அவதாரத்தின் கமேரா கலைஞன் டெசூபன் திரைப்படத்தின் கமேராமேனாகவும் பணியாற்றியுள்ளார்.
பிரான்சில் திரைப்படங்களை வெளியீடு செய்யும் ரமேஸ் அலைகள் மூவீஸ் பூக்களை பிரான்சில் பெரு வெற்றிபெற செய்தவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
அந்தவகையில் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் பிரச்சார பாடல்கள் தயாரிப்பில் பணியாற்றும் கலைஞர்களில் சதா பிரணவனும் தனது கரங்களை இணைத்துள்ளார்.
யார் இந்த சதா. பிரணவன்..
இவருடைய இயற்பெயர் சிவகாந்தன், இவருடைய தகப்பனார் பெயர் சதாசிவம், தயார் பெயர் பிரணவசொரூபி இரண்டு பெயர்களையும் இணைத்து சதா பிரணவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டமை இவர் பெற்றோர் மீது கொண்ட பாசத்திற்கு அடையாளமாகும்.
ஈழத்தின் இயற்கை அழகு கொஞ்சும் எழில் மிகு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது 12 வது வயதில் பெற்றோருடன் பிரான்சிற்கு புலம் பெயர்ந்தார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் 1994ல் தனது நண்பர்களுடன் இணைந்து புதிய நண்பர்கள் என்ற பெயரில் நடனக்குழுவொன்றை அமைத்து, மேடை நிகழ்ச்சிகளை வழங்கினார், இதுவே இன்றைய அவதாரம் என்ற கலைக்குழுவாக உருவெடுத்தது.
இவர்கள் கவிதை எழுதுதல், பாடல் இயற்றுதல், அவற்றை இசைப்பாடல்களாக்கி காணொளிகளாக வெளியிட்டனர், அடுத்த கட்டமாக பல தரமான குறும்படங்களை தயாரிக்குமிடத்திற்கு முன்னேற்றமடைந்தனர்.
சதா பிரணவன் இயக்கிய, நடித்த குறும்படங்கள் பல பரிசுகளை வெற்றி பெற்றுள்ளன.
முதலாவது சங்கிலியன் விருது நிகழ்வில் இவர் சிறந்த நடிப்பிற்காகவும், சிறந்த திரைக்கதைக்கான பரிசுகளை பெற்றார், இடிமுழக்கம் என்ற இவர் நடித்த குறும்படம் சிறந்த திரைப்படமாக தேர்வானது.
கனடாவில் இருந்து வெளிவரும் ரீவி 1 நடாத்திய குறும்படப் போட்டியிலும் இந்தத் திரைப்படம் வெற்றிபெற்றது.
போராளிக்கு இட்ட பெயர் என்ற இவருடைய இன்னொரு குறும்படமும் பெரும் பாராட்டைப் பெற்றுக் கொண்டது, த ஒப்பசிற், நாங்கள், நீ இடைவெளி நான் போன்றனவும் பரிசுகளை வென்றன.
குறும்படப் போட்டிகளில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்து வருகிறார் சதா. பிரணவன்.
இதுவும் கடந்து போகும் என்ற வாசகத்தை மனதில் ஏந்தி நடந்து போகும் இந்த இளைஞனின் சாதனைகள் பெரும் பட்டியலாக நீண்டு செல்கிறது.
satha1
01. போராளிக்கு இட்ட பெயர் ( இயக்குநர் நடிகர் )
02. த ஒப்பசிற் (நடிகர்)
03. தினப்பயணம் ( நடிகர் – இயக்கம் )
05. நாங்கள் ( நடிகர் – இயக்கம் )
06. நீ இடைவெளி நான் ( நடிகர் – இயக்கம் )
07. தீரா இருள் ( இயக்கம் )
08. விடுதலை ( இயக்கம் )
09. இடிமுழக்கம் ( நடிப்பு – இயக்கம் )
10 ரு டே 27 ( இயக்கம் )
இதுதவிர பல பாடல்களையும் எழுதி தனது கவிதா ஆற்றலையும் பதிவு செய்துள்ளார்.
இவருடைய கவிதைகள் பல காணொளிகளாக வெளிவந்து இதயங்களை அசத்தியுள்ளன.
இவருடைய அடுத்த முயற்சி ஒரு முழு நீள திரைப்படத்தை புலம் பெயர் தமிழ் திரையுலகின் முன் வழங்குவதாகும்..
அவருடைய பணிகள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP