Tuesday, October 23, 2012

கலைவாணியை நினைத்து எழுத்தாணியை எடுத்தால் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

கலை வாணியை நினைத்து எழுத்தாணியை
எடுத்தால், கவிதையாய் வந்து கொட்டுவாள்!
வெண் கமலத் தாயை தன் அகத்தில் நினைப் -
போரின் அறிவுக் கதவை வந்து தட்டுவாள்!

அறிவியலிசையைக் கொடுக்கக் கையிலே
நாத வீணை! அன்னையை வணங்குவோர்க்கு
மீட்டிக் காட்டுவாள் வீணையின் நாணை!
இது அந்த அன்னையின் மீது ஆணை!

நாமகளின் நெஞ்சத்திற்குப் பிடித்தமானது
என்றும் வெள்ளை! அந்தப் பூமகளின்
பாதம் பிடிப்போர்க்கு அறிவுக்குப்
பஞ்சம் என்றுமே இல்லை!

புத்தகங்களை அவள் பாதத்தில்
நம்பிக்கையோடு வைத்துப் பூசை செய்தால்
நல் வித்தகர்களாய் மாற்றிடுவாள்! வித்தைகள்
பலவற்றையும் அள்ளி வழங்குவதால்
வித்தியா எனப் பெயர் பெற்றாள்!

வெள்ளைக் கேசரி மீதேறிப் பிள்ளை
மனதோடு அன்னை வலம் வருவாள்!
கண்டோரை மயக்கும் வெண்டாமரைப்
பூவில் எப்போதும் அமர்ந்திருப்பாள்!

கம்பனின் நாவிற்குக் கவி இரசம்
வடித்துக் கொடுத்தவள்! தன் அன்பன்
அம்பிகாபதிக்கிரங்கிக் கொட்டிக் கிழங்கு
சுமந்தவள்! ஆதலால் உள்ளம் கரைந்து
உருகி வழிபட்டால் வெள்ளம் போல் ஓடி வருவாள்!

தூயவள், கலைமகள், நாமகள்
ஆய கலைகளின் நாயகி! ஆதலால்
சகலகலா வல்லி என்றானாள்!

மலைமகள், அலைமகள், கலைமகள்
மூவர்க்குமாய் நவராத்திரி விழா என்பர்!
அன்னைக்கு மட்டும் வாணி விழா என்றும்
சரஸ்வதி பூசை என்றும் இந்துக்கள்
சிறப்பாக விழா எடுப்பர்!

பூமாலை தொடுத்துப் பாமாலை படித்து
செல்விக்கு விருந்தோம்பினால் - நம்
கல்விக்கு உரம் போடுவாள்!
அறிவினில் சிறந்தோங்கலாம்!

ஏடு தொடக்கி வித்தைக்கு அடியெடுத்துக்
கொடுப்பதால் அவளை வித்தியாரம்பக்
கடவுள் என்போம்! கல்வியிலே சித்தியடையக்
கலை வாணியை வணங்கு! கல்லாத ஏழைகட்குக்
காலமெல்லாம் கற்றோரே கல்வியை வாரி வழங்கு!

திட்டமிட்டே நம் கல்வியை அழித்தனர்
தீயிட்டே நம் செல்வத்தை எரித்தனர்! எனினும்
வீரம் விளைந்தாடும் நம் பூமியைப் பாராய்
அந்த வீர மறவரைக் காத்திட வாராய்!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP