அம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு!!
நயினாதீவினை எல்லோருக்கும் நினைவூட்டுவது அருள் சுரக்கும் அன்னை நாகம்மாள் கோயிலாகும். மணிமேகலை எனும் தமிழ் மங்கை நல்லாள் வந்திறங்கியதற்கான சரித்திரப் பெருமையும் இவ்வூரிற்குண்டு. வெளி வீதியில் சுற்றி வர நிற்கும் நிழல் தரு மரங்கள் இக்கோயிலின் வீதியை அழகு செய்கிறது. புதிய கோபுரமும் கோயிலுக்குரிய புனரமைப்பு வேலைகளும் கோயிலின் அழகை மேலும் அதிகரித்திருக்கிறது. நயினை நாகம்மாளின் வருடாந்த திருவிழா என்றால் சைவப்பெருமக்கள் எங்கிருப்பினும் போய்வரத் தவறமாட்டார்கள். புலம் பெயர்ந்த மக்களும் வருடம் ஒருமுறையாவது நாகம்மாள் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கமாய் உள்ளது . நயினையைச் சேர்ந்த மக்கள் எங்கு வாழினும் வருடாந்த திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பே போய் விழா முற்றாக நிறைவடைந்த பின்னரே வாழ்விடம் திரும்புவர் . அம்பாளின் நினைவின்றி அவர்கள் காலம் கடந்திடாது . அம்பாளிடம் அத்தனை நம்பிக்கையும் , பற்றும் அவர்களுக்குண்டு . இன்றைய காலங்களில் செவ்வாய் , வெள்ளி மற்றும் பூரணை தினங்களில் அதிக தொகையான மக்கள் அம்பாளிடம் போய் வருவதைக் காணலாம்.
கோயிலுக்கு செல்லும் அடியார்களுக்கு " அமுதசுரபி" அன்னதான சபையினர் நாள் தோறும் சிறப்பாக அன்னதானப் பணியை செய்து வருகின்றார்கள். இது ஓர் அரும்பெரும் காரியம், பாராட்டுக்குரிய செயல். ஆனாலும் கோயிலைச் சுற்றி நிற்கும் நிழல் தரு மரங்களைப் போல் ஏனைய தெரு ஓரங்களில் இல்லாமை பெருங்குறையாகவே உள்ளது. தெருவோரங்கள், மக்கள் நடமாடும் இடங்கள் எங்கும் நிழல் தரு மரங்கள் வேண்டும் . இதற்கான ஆக்கப்பணியை செய்வதற்கு அன்னதான சபையினர் முன் வரவேண்டும் . அதற்குரிய ஆற்றலும் வலிமையும் அவர்களுக்கு உண்டு.
வீட்டு நிலப்பரப்புக்கள் , காணிகள் , வயல்கள் எல்லாவற்றிகும் வரப்புகளை கட்டி மழை நீரை தேக்கினால் இங்குள்ள கிணறுகள் நன்னீர் வளமுடையதாக மாற்றம் அடையும். பனை , தென்னை ஏனைய வளங்களும் அதிகரிக்க வாய்ப்புண்டு. நீர் வளம் பெருகினால் நிலமும் வளம் கொழிக்கும்.
நயினாதீவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வேப்பமரங்களை வளர்த்து இலவசமாக வழங்கி வந்தார். புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வர்த்தகரான "சுப்பிரமணியம் திருநாவுக்கரசு" என்பவர் இவ்வாசிரியரிடம் வேப்பமரக் கன்றுகளை பெற்று குறிகாட்டுவான் பேச்சியம்மன் கோயில் வீதியில் நட்டு வளர்த்துள்ளார். இன்று அவை பெரும் நிழல் தரு மரங்களாய் வளர்த்து நிழல் பரப்பி நிற்கின்றன. வேப்பமரக் கன்றுகளை வளர்த்து இலவசமாக வழங்கி பெரும் பணி செய்த அவ் ஆசிரியப் பெருமகனை நன்றியுடன் நினைவு கூறி நிற்கின்றேன்.
0 comments:
Post a Comment