Saturday, October 6, 2012

பேச்சியம்மன் ( மனோன்மணியம்மன் ) - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

குறிகாட்டுவான் பதியில் வந்தமர்ந்து கொண்டவளே
எங்கள் குலவிளக்கே அம்மா மனோன்மணி!
அறிவாலே உனது மகிமையை அறிந்து கொண்டவரே
பெருவான் வெளியிலே கருநாகம் குடை பிடிக்க நின்றவளே!
எங்கள் குலவிளக்கே அம்மா மனோன்மணி!

மூச்சிலும் எங்கள் பேச்சிலும் பேச்சியம்மன் தான்
உன்னை மறந்தவர்கள் வாழ்வினில் வீழ்ச்சி நிசம் தான்!
காற்றிலும் இருப்பாய்! பெருங்கல்லிலும் இருப்பாய்!
வீட்டிலும் எங்கள் நாட்டிலும் மீட்சியைக் கொடுப்பாய்!
எங்கள் குலவிளக்கே அம்மா மனோன்மணி!

நேற்றுனக்குப் பூசை செய்தோர் எங்கு போயினர்?
குடியிருந்த கோயில் விட்டு எங்கு போயினர்?
போனவர் வருவாரோ? புது வாழ்வு பெறுவாரோ?
கூற்றுவர் வந்து குடிகொண்டார் எம் மண்ணிலே
பெருங்காற்றென வந்து கூற்றினைக் களைவாய்!
போனவர் வருவார்! புது வாழ்வு பெறுவார்!
எங்கள் குலவிளக்கே அம்மா மனோன்மணி!

கோயிலில்லா ஊர் தனிலே குடியிருப்பதில்லை
குடிகளில்லா ஊர் தனிலே நீயிருப்பதேன்?
நாய்களும் நரிகளும் நம் குடி வந்ததேனா?
தாயை மீட்கப் பிள்ளைகள் வருவாரோ? – வருவார்
வருவார் பெருங்கடலென வருவார்! – எழுவார்

எழுவார் பெரும் அலையென எழுவார்!
கரம் தனிலே பலம் கொடுப்பாய் மனோன்மணி
அவர் மனங்களிலே பலம் கொடுப்பாய் மனோன்மணி
எங்கள் குலவிளக்கே அம்மா மனோன்மணி!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP