Tuesday, March 6, 2012

புங்கை மண்ணின் புகழ்பூத்த மனிதர் உயர்திரு. தில்லையம்பலம் சதாசிவம்.

                            ( ஓய்வுபெற்றஅதிபர்இ பிரபலசோதிடர்)
      யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள சப்ததீவுகளில் நடுநாயகமாகத் திகழ்வதும் வர்த்தகம் கலை கல்வியில் சிறந்து விளங்கும் தீவு புங்குடுதீவு ஆகும்.
     இத்தீவின் உயர்குடி மக்களாகவும் அக்கால மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களாகவும் திகழ்ந்தவர்கள் தனிநாயகமுதலியார் பரம்பரையினர் ஆவார்.
இப்பரம்பரையில் வந்த ஆறுமுக உடையார் அவர்களின் மகளான சிவகாமிப்பிள்ளை அவர்களுக்கும் புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்த நாராணர் தில்லையம்பலம் ஆசிரியர் (குமரேசு வாத்தியார்) அவர்களுக்கும் சிரேஸ்ட புத்திரனாக 13.10.1917 இல் அவதரித்தார் ஆசிரியர் சதாசிவம் அவர்கள்.
  இவர் தனது ஆரம்பக்கல்வி உயர்கல்வி இரண்டையும் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகாவித்தியாலயத்தில் நிறைவு செய்தார். 1950ஆம் ஆண்டில் திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியை முடித்து தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். முதலில் புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்திலும் பின்னர் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையிலும் தனது சேவையைத் தொடங்கினார். இவரிடம் கணிதவிற்பனம் பெரிதும் காணப்பட்டது.
   தனது ஆசிரிய சேவையின் நீண்ட காலப்பகுதியை 18 வருடங்களை புங்குடுதீவு ராஜராஜேஸ்வரி வித்தியாலயத்தில் ஆற்றினார்.அங்கு மாணவர்களினதும் பெற்றோரினதும்  நன்மதிப்பைப் பெற்றார். இறுதியாக புங்குடுதீவு அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் 1971 இல் அதிபராக பதவியுயர்வு பெற்று 1973 இல் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
  சதாசிவம் ஆசிரியர் அவர்கள் 1952ஆம் ஆண்டு தைமாதம் புங்குடுதீவு 2ம வட்டாரத்தைச் சேர்ந்த அன்னப்பிள்ளை கந்தையா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியான ஆசிரியை தருமலெட்சுமியை கரம்பற்றினார். ஆசிரியர் மூன்று புதல்விகளின் தந்தையும் ஆவார். புதல்விகளையும் கற்பித்து உயர் பதவிகளில் அமரச் செய்தார். இவரது அன்புப் பாரியார் அவர்கள் கணவரின் சமூகப்பணிகளில் பெரிதும் பக்கத்துணையாக விளங்கினார்.
       'சதாசிவவாத்தியார்'; என்றவுடன் அவரது வெள்ளைவேட்டி நசனல் நெற்றியில் குங்குமப் பொட்டும் எப்போதும் மலர்ந்திருக்கும் முகமும் உடைய கம்பீரமான தோற்றமே எங்கள் மனக்கண் முன் வந்து நிற்கும். இவரது பணி கல்விப்பணியுடன் மட்டும் நின்றுவிடாமல் சமூகப்பணி சைவப்பணி என விரிவடைந்தது. அத்துடன் இவரிடம் காணப்பட்ட கணித திறமையால் ஒரு மனிதனின் சோதிட பலன்களைக் கணியன் பூங்குன்றனார் போல் கணிப்பதில் முன்னணியில் திகழ்ந்தார். மொத்தத்தில் சோதிடக்கலை இவரிடம் அரவணைப்புப் பெற்றதெனலாம். வீட்டு நிலையம் கணித்தலிலும் சிறந்து விளங்கினார்.
       புங்குடுதீவின் முதல் இணக்கசபையின் தலைவராக 1972 இல் பதவியேற்று பல சிக்கல்கள் நிறைந்த வழக்குகளை சிக்கறுத்து செம்மையாகத் தீர்ப்பு வழங்கியவர். இதனால் புங்குடுதீவு மக்களின் அன்பையும் பேராதரவையும் பெற்றார்.  புங்குடுதீவு நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தலைவராயுமிருந்து சேவையாற்றியவர். தமிழினப்பற்று நிறைந்தவர்.

இறைபக்தி நிறைந்தவர். இவரது தந்தையார் புராணப்படலக் கலையை புங்குடுதீவில் வளர்த்த பெருமைக்குரியவர். அவரது வழியில் ஆசிரியரும் ஈடுபட்டார். இவரது இனிமையான நாவினிசையும் புராணப்பாடல்களுக்கு பொருள் கூறும் அழகும் இன்றும் பலரது மனங்களில் இடம் பெற்றிருக்கிறது என்பதில் ஜயமில்லை. இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் போதும் தனது இறைபணியைக் கைவிடவில்லை. இறுதிவரை மேற்கொண்டார்.
     திரு. சதாசிவம் அதிபர் அவர்கள் 13.12.2001 இல் தனது 83ம் வயதில் இறையடி சேர்ந்தார்.
     ' வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் - வானுறையும்
       தெய்வத்துள் வைக்கப்படும்'
   என்னும் திருவள்ளுவர் குறளுக்கேற்ப வாழ்ந்து வையகத்தில் தனியான இடத்தைப் பிடித்தவர்தான் அதிபர் சதாசிவம் அவர்கள். இவரது நாமத்தை புங்குடுதீவு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

நன்றி.
       

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP