Saturday, January 7, 2012

புங்குடுதீவில் இருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்களை சிறையில் அடைத்ததுக்கு சீமான் கண்டனம் .

இலங்கையின் யாழ். புங்குடுதீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டினி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, உயிருக்குப் பாதுகாப்புத் தேடி ஜகதாபட்டினம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கையாகும்.
சிறு பிள்ளைகளுடன் உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை கடவுச்சீட்டு இல்லாமல் வந்தக் குற்றவாளிகள் என்று கூறி நீதிமன்றத்தில் நிறுத்திய தமிழக காவல்துறையின் நடவடிக்கை நாகரீகமற்றது, இரக்கமற்றது என்பது மட்டுமின்றி, பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனங்களுக்கும் எதிரானதாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒரு வயது குழந்தை உட்பட மூன்று சிறுமிகளுடன் வந்திருங்கிய இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், அறந்தாங்கி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வெவ்வேறு சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டிருப்பட்டுள்ளனர் என்று செய்தியை கேட்டபோது நெஞ்சம் பதறுகிறது.
இலங்கையில் இன்றளவும் தொடரும் சிங்கள பெளத்த இனவெறி அரசின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடக் கூடத் தெம்பின்றி, சர்வதேசம் தலையிடாத காரணத்தினால் மெளன வலியுடன் எல்லா அடக்குமுறைகளையும் சகித்துக்கொண்டு நம் சொந்தங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிற நிலையில், சாப்பிட்டிற்கே வழியற்ற நிலையில், பாதுகாப்பி்ற்காகவும், பிழைக்க வழிதேடியும் தங்களின் இன்னொரு தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருவது கூட குற்றமாகுமா?
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உண்மையை அறிந்த பிறகும், அவர்களை ஏதாவது ஒரு அகதிகள் முகாமிற்கு கொண்டு சென்று மனிதாபிமான உதவிகளைச் செய்யாமல், நீதிமன்றத்தில் நிறுத்தி, குடும்பத்தினரைப் பிரித்து சிறையில் அடைக்கிறது தமிழக காவல்துறை என்றால், அது அகதிகளை கையாளும் பன்னாட்டுப் பிரகடனங்களை அவமதிக்கிறது என்றல்லவா பொருள்.
இலங்கையில் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெறும் வரை தமிழக அரசு ஓயாது என்று தமிழக சட்டப் பேரவையில் தமிழ்நாட்டின் முதல்வர் உறுதிபடக் கூறினார். ஆனால், அவருக்குக் கீழ் இயங்கும் காவல் துறை, உரிமையற்று, வாழ வழியற்று தாய் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் நம் சொந்தங்களை மனிதாபிமானமற்று நடத்துகிறது, சிறையில் அடைக்கிறது. இது என்ன முரண்பாடு? இது தமிழ்நாட்டின் காவல் துறைதானா அல்லது இலங்கை அரசின் காவல் துறையா என்ற ஐயம் எழுகிறது.
தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் நாட்டில் தனது உயிருக்கும், உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கருதி, வேறொரு நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பையும், மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் வலியுறுத்துகிறது.
1948ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அந்த பிரகடனத்திற்கு எதிராக, மனிதாபிமானமற்ற வகையில் தமிழக காவல் துறை செயல்ப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் இந்த கொடூரமான, நாகரீகமற்ற நடவடிக்கையை தமிழக அரசு தடுத்தி நிறுத்தி, சிறையில் அடைக்கப்பட்ட நம் சொந்தங்கள் 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. அவர்கள் விடுதலை செய்யப்படவில்லையென்றால், நாம் தமிழர் கட்சி போராடும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP