Sunday, December 25, 2011

என்ன பிழை செய்தோம் கடலம்மா? - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

என்ன பிழை செய்தோம் கடலம்மா?
நீயிட்ட தண்டனை பெரிதம்மா!
கடலன்னை மடியினிலே கடல் பூகம்பம்
நடந்தது. கலை கொண்ட பெண்ணைப் போல்
கரை கடந்து வந்தாள் சமுத்திரா தேவி!
கரையோரம் வாழ்ந்திருந்த மக்களை அடியோடு
களை எடுத்தாள். குஞ்சு, குருமன், இளையவர், முதியவர்,
ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அத்தனையும்
களைந்தெடுத்தாள்!

வாழ வைத்த தெய்வமே வாழ்வைப்
பிடுங்கிக் கொண்டாள்! ஆழ்கடல் பொங்கி
வந்து அலைக்கரங்கள் உயர்ந்தெழுந்து
ஊருக்குள் புகுந்ததுவே! ஊர் மனை யாவும்
அழித்ததுவே! உருட்டிப் புரட்டி வதை செய்தாள்!
என்ன பிழை செய்தோம் கடலம்மா? நீயிட்ட
தண்டனை பெரிதம்மா!

மட்டக்களப்புடன் அம்பாறை மாபெரும்
அழிவுக்குள்ளானதே! மன்னாரையும் அவள்
விட்டு வைக்கவில்லை! ஏலவே பல்லாண்டுகள்
தொல்லையுடன் வாழ்ந்து வந்த முல்லைத்தீவின்
பல கிராமங்கள் சுடுகாடாயப் போயினவே!

அங்கு செந்தளிர் இல்லத்தில் இருந்த
இளந்தளிர்கள் பலர் கடலோடு கடலாய்ப் போனாரே!
என்ன பாவம் செய்தனர் அக்குருத்துக்கள்!
இறiவா! இது என்ன ஊழிக்கூத்தா?
அல்லது ஊழி நடனத்தின் முதற் கட்டமா?

வடமராட்சி கிழக்கின் அத்தனை கிராமங்களும்
அடியோடழிந்து போச்சே! -இறiவா!
அங்கு வாழ்ந்த மக்கள் என்ன பாவம் செய்தனர்?
சொல்லியழ நாதியில்லை! சொந்தமென்று ஏதுமில்லை!
பயன் தரும் மரங்களில்லை! பருகுவதற்கு நல்ல
குடிநீரில்லை!

என்ன கொடுமையிது! என்ன குற்றம் செய்தது
தமிழினம். இரு தசாப்தங்களாகத் துன்பத்தோடு
வாழ்ந்த மக்களை மென்மேலும் ஏன் கொடுமைக்
குள்ளாக்கினாய்? நல்ல தெய்வம் என நினைத்தோம்
நாமுன்னை! நரபலி கொண்டாய் நீ எம்மை!

ஐயோ! அம்மா என்றும், அன்பு அப்பா என்றும்
அண்ணா நீ எங்கெயென்றும், என் பிள்ளையைக்
கொண்டு வந்து தாருங்கள் என்றும், அக்கா தங்கை
என்றும், செத்த உடலைத் தட்டி எழுப்பி,
எழுந்து வாடா! என் தம்பியென்றும்,

கடல் மேல் விழியெறிந்து காணாமல்
போனவர் வரமாட்டாரா? என ஏங்கி ஓங்கியழுத அவலக்
குரல்கள் ஈழவானைப் பிளந்தனவே! இறiவா! அந்தோனியாரே!
உன் செவிகட்குக் கேட்கலையோ? அந்தோ! பரிதாபம்.
அடையாளம் காணமுடியாமல் புதைக்கப்பட்டோர்
எத்தனை? உறவுகள் ஏதுமின்றிக் கிடந்த உடலங்கள்
எத்தனை? தாய் தந்தை உறவிழந்து தனியே நின்ற
சின்னஞ் சிறுசுகள் எத்தனை? ரணகாயங்களுடன் வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டவர் எத்தனை? ஒரே குழிக்குள்
ஒன்றாகப் புதைக்கப்பட்டவர் எத்தனை?
போராட்ட காலத்தில் கூட இத்தனை கொடுமைகள்
ஏற்பட்டதில்லை! அதை விடப் பலமடங்கு துயரத்தைத்
தந்த கடலே! செய்வதெல்லாம் செய்து விட்டு
என்னை எவரும் எதுவும் செய்ய முடியாதென்ற
நினைப்பில் ஆடுகின்றாய்!
ஆழி நடுவே ஆழிப்பூகம்பம் உண்டான போது
ஆழி மங்கை கூத்தாடத் தொடங்கினாளே!
அவ்வழகைப் பார்த்துக் கொண்டிருந்தாயாடா?
ஆழி மழைக் கண்ணா! வாயைத் திறந்தால்
உலகம் காட்டுவேன் என்றாயே!
உன் வாய் திறந்து நீர் முழுவதும் விழுங்கியிருந்தால்
வடக்கும் கிழக்கும் விழுங்கப்பட்டிருக்காதே! அவள்
ஆடிய ரசனையில் நீ மயங்கித் துயில் கொண்டாயோ?
நீ பெண் பித்தனல்லவா? அதைத் தான் செய்திருப்பாய்!
ஐயகோ! அத்னையும் போச்சே! அல்லோல
கல்லோலப் பட்டதே மனிதம்!
முல்லைத்தீவிலே இயற்கையின் சீற்றத்தால்
1500 வள்ளங்கள் ஒன்றோடொன்று மோதி உடைந்து
சிதறி நாசமாய்ப் போச்சுதே! 20,000இற்கும் மேற்பட்ட
இனிய உயிர்கள்! நம் அன்புச் சொந்தங்கள் மண்ணோடு
மண்ணாய்ப் போயினரே! வடக்கிலும் கிழக்கிலும் உயிர்ச்
சேதமும், பொருட்ச் சேதமும் கணக்கிட முடியாதவை!
சொந்தங்களைப் பறிகொடுத்த மனங்கள் சிதறிப் போயினவே!
தேற்றுவார் யாருமில்லை! ஆற்றுவார் யாருமில்லை!
மாற்றான் தாய் மனங் கொண்டு இலங்கையரசு நடக்கிறது.
சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாமல் இருக்கிறது.
இறiவா! ஈழமக்கள் உலகுக்கு என்ன எதிரிகளா?
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொன்னானே!
தமிழ்க்கவி கணியன் பூங்குன்றன். இது என்ன பொய்யா?
மற்றவர் உதவியை எதிர் பார்ப்பது மடமைத்தனம்.
நமக்கு நாமே உதவி! நம்பிக்கையோடு
மீண்டும் எழுவோம்!

கள்ளமில்லா மனிதர் வாழ்ந்த கள்ளப்பாடு
பேரலைகள் வந்து தாக்கிய போது யாரறிவார்
அவர் பட்ட பாடு! வெட்டிச் சரித்து விட்டது போல்
காட்சி தந்தது வெட்டு வாகல்! முடிந்த வரை இன்பமாய்
வாழ்ந்திருந்தோம் முள்ளியவளையில,; முற்றாக அள்ளிச்
சென்று விட்டாள்! கொடியவள் முல்லைக் கடலரக்கி!
முன்பிருந்த சொந்தங்கள் இன்றில்லை! இருப்பினும்
வாழ்வோம் ஒற்றுமையாக் கூட இருப்பவரோடு!
ஒரு தளம்பலின்றி நிறைவாக வாழ்ந்திருந்தோம்
அலம்பிலில் நாங்கள்! இன்று மலங்க விழிக்கின்றோம்
எல்லாம் பறி கொடுத்து கலங்கிய விழிகளோடு,
நாளைய வாழ்வினை எண்ணி! ஓயாமல் உழைக்கும்
கரங்கள் நாயாற்றில் உண்டு. மாடாக உழைத்து ஓடாகத்
தேய்ந்தோம் இன்று வெறுமை தான் மிச்சமுண்டு!
மீன்பாடும் தேன் நாடு மட்டக்களப்பு - சோகமே
பாட்டாச்சு உள்ளமெல்லாம் கொதிப்பு!
பார்க்குமிடமெல்லாம் பாலை வனம் போலாச்சு
தேக்குமர உடல் கூடப் பிணமாய் வீழ்ந்தாச்சு!
உழவோரும் உழைப்போரும் நிறைந்து வாழும்
களுவாங்கேணி உழக்கி விட்டுப் போய் விட்டாள் கடலரக்கி
இப்போது, எழுவான் திசையும் தெரியவில்லை. படுவான்
கரையும் புரியவில்லை! பித்துப் பிடித்தவர் போல மக்களங்கே!
அம்பாறை மண்ணோ வடுக்களோடு ஆற்றுவார்
யார் வருவார் மக்கள் தெருக்களோடு! பேரழிவைச்
சந்தித்த மாவட்டமோ அம்பாறை பெரும் பான்மைச்
சிங்களமே! உதவ முன் வராததேனோ? உன்
மனமென்ன கற்பாறையோ?

சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP