Monday, August 22, 2011

புங்குடுதீவுப் பகுதியில் சிங்கள மீனவர் குடும்பங்களை குடியமர்த்த முயற்சி.

யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தெற்கின் கவனம் திரும்பியுள்ள நிலையில் உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில் புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் தொடர்கின்றது.
அதேவேளை நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்து தங்கியுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு அமைச்சினதும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும் அனுமதியுடனேயே குடாநாட்டிற்கு வந்துள்ளனர்.

இவர்களுக்கான படகுகள் மற்றும் வதிவிட உதவிகளை உள்ளூர் மீனவர்கள் வழங்கி வருகின்றனர். பெருமளவு தென்னிலங்கை மீனவர்கள் முகாம் சூழல்களிலும் தங்கியுள்ளனர்.

எனினும் தென்னிலங்கை மீனவர்கள் அதி கூடிய வெளியிணைப்பு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் தென்னிலங்கை மீனவர்களுக்கு படகுகளையோ, வதிவிடங்களையோ உள்ளூர் மீனவர்கள் வழங்கக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒன்று கூடிய மீனவ சங்கங்கள் இம்முடிவை எடுத்திருந்தன.

இத்தகைய இழு பறிகளின் மத்தியிலேயே தெற்கு மீனவர்களது கவனம் கடற்படையினரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவகப் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ளது. கடற்படையினரது பாதுகாப்புடன் வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னிலங்கை மீனவர்கள் புங்குடுதீவு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபட முற்பட்டுள்ளனர்.

எனினும் இதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து உட்பட்ட முறுகல் நிலையை தீர்க்க உள்ளூர் மீனவ சங்க பிரதி நிதிகளை கடற்படை அழைத்திருந்தது. அவ்வேளைமீனவ சங்க பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட பிராந்திய கடற்படை கட்டளை தளபதியுடன் பேச்சுகளை நடத்தியதையடுத்து சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது. தென்னிலங்கை மீனவர்களை அனுமதிக்கப் போவதில்லை எனவும் கூறப்பட்டது.

இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே நெடுந்தீவிலுள்ள அரச காணிகளில், தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்தும் முயற்சிகள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடக் கூடியதாக, தொழில் உபகரணங்கள் சகிதம் இம் மீனவ குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன.

இவர்களுக்கு இந்திய வீடமைப்பு திட்ட உதவியின் கீழ் நிரந்தர வீடுகளை அமைத்து வழங்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.


0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP