Sunday, June 19, 2011

புங்குடுதீவு,ஊர்காவற்றுறை மக்களுக்கு வாழ்வாதார அபிவிருத்தி உபகரணங்கள்.

யாழ். இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மற்றும் ஊர்காவற்றுறை மக்களுக்கான வாழ்வாதார உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வொன்று இன்று ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்காக சுமார் 75ஆயிரம் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்கள், பாடசாலை மாணவர்களுக்கான தைத்த சீருடைகள், மீன்பிடி சங்களுக்கான சுமார் 10 இலட்சம் பெறுமதியான படகு இயந்திரங்கள் என்பன கையளிக்கப்பட்டன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக யாழ். இராணுவ தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுச்சேவை நடவடிக்கைகள் யாழ். மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கு மாத்திரமே வியாபித்திருந்தன.

இந்த பொதுச் சேவைகள் தீவுப் பகுதி மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் முதற்கட்டமாகவே ஊர்காவற்றுறை மற்றும் புங்குடுதீவு மக்களுக்கு இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக வல்கம தலைமை தாங்கினார்.

அத்துடன், ஊர்காவற்றுறை மற்றும் வேலணை பிரதேச செயலாளர்களான ஸ்ரீ மோகன், நந்தகோபால் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜனக வல்கம, 'இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான தொடர்பு மேலும் பலப்படுத்தப்படுகின்றது' என்றார்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP