Saturday, June 18, 2011

பெருங்காடு சிவன் கோயில்.

மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை ஸ்தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை மதுரையிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை. ஆலயத்தின் திருப்பணிகள் முடியுமுன்னரே மார்க்கண்டேயக் குருக்கள் கதிர்காமத்திலே இறைவனடி சேர்ந்தார்.

அதன் பின்னர் குருக்களின் மனைவியாரும் அவரின் சகோதரர்களும் சேர்ந்து ஊர்மக்களின் உதவியோடு பிள்ளையார் கோயில், நவக்கிரக கோயில், வைரவர் கோயில் ஆகியவற்றோடு கூடிய ஆலயத்தின் திருப்பணிவேலைகளை நிறைவு செய்து சிறப்பாக கும்பாபிடேகத்தினையும் செய்தார்கள்.

இரண்டாவது கும்பாபிடேகமும் சிறிது காலத்திலேயே இடம்பெற்றது. இதன்பின் 1977ம் ஆண்டு பஞ்சலிங்க கோயில், மகா விஸ்ணு கோவில் என்பனவும் அமைக்கப்பட்டு மூன்றாவது கும்பாபிடேகமும் சிறப்பாய் நடைபெற்றது. இதன்பின் 1991இலும் பின் 2005இலும் கும்பாபிடேகங்கள் நடைபெற்றன.

இவ்வாலயத்திலே வருடாந்த மகோற்சவம் பங்குனி மாதத்தில் நடைபெறும். இதைவிடவும் சங்கிராந்தி பூசை, பிரதோசம், நால்வர் பூசை, நவராத்திரி பூசை, நடராஜர் அபிசேகம், கேதாரகௌரி நோன்பு, இலட்சார்ச்சனை, மார்கழி திருவாதிரை, ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

புங்குடுதீவிலே இரண்டு இராச கோபுரங்களுடனம் அமைந்து சிறப்பைக்கொடுப்பதாய் இவ்வாலயம் அமைந்துள்ளது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP