Friday, June 17, 2011

மருத்துவ, போக்குவரத்து அடிப்படை வசதிகளின்றி புங்குடுதீவு பிரதேச மக்கள் அவதி!

யாழ் புங்குடுதீவு மாவட்ட வைத்திய சாலை முழுநேரமாக இயங்காத காரணத்தினால் அங்குள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வட இலங்கை சர்வோதய நிலையப் பொறுப்பாளர் கந்தையா புஸ்பமணி தெரிவித்தார்.

புங்குடுதீவு மாவட்ட வைத்தியசாலை தற்போது 2 மணித்தியாலயங்கள் மட்டுமே இயங்கி வருவதாகவும், இதனால், காய்ச்சல் மற்றும் பிரசவம் உள்ளிட்ட மக்களின் அன்றாட மருத்துவத் தேவைளை நிறைவு செய்வதற்காக இந்தப் பகுதி மக்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வசதி கிடைத்தும் வைத்தியசாலை முழுநேரமாக இயங்காத காரணத்தினால் புங்குடுதீவு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், கந்தையா புஸ்பமணி தெரிவித்தார்.

புனரமைக்கப்படாத வீதிகள்

புங்குடுதீவில் உள்ள பல வீதிகள் திருத்தப்படாமலும், அகலமாக இல்லாதிருப்பதனாலும் வீதி விபத்துக்கள்அடிக்கடி நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணைப் பாலம் ஊடாக புங்குடுதீவு செல்லும் வீதியின் அகலம் போதாமையினால் பலமுறை வீதி விபத்துக்கள் ஏற்பட்டதாகவும், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டும் வீதிகளின் அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

குடிநீர்ப் பிரச்சினை

இந்தப் பகுதி மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதறாகத் தெரிவித்த அவர், இந்த மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை வேலணைப் பிரதேச செயலகம், வட இலங்கை சர்வோதய நிலையம் மற்றும் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தீவகத்தின் வளங்கள்

கல்வியில் சிறந்து விளங்கிய புங்குடுதீவின் கல்வி நிலை தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், வட இலங்கை சர்வோதய நிலையப் பொறுப்பாளர் கந்தையா புஸ்பணி தெரிவித்தார்.

பனைவளம், கடல்வளம், உபதானியப் பயிர்கள், நெல் உற்பத்தி மற்றும் புகையிலை உற்பத்தி என அனைத்தையும் கொண்டு தன்னிறைவு பெற்றுள்ள ஒரு கிராமம், தற்போது பல நிலைகளிலும் பின்தங்கியுள்ளமை கவலையளிப்பதாகவும், வட இலங்கை சர்வோதய நிலையப் பொறுப்பாளர் கந்தையா புஸ்பணி தெரிவித்தார்.

இதேநேரம் இங்கு கருத்துத் தெரிவித்த புங்குடுதீவைச் சேர்ந்த முத்துத்தம்பி தியாகராசா என்ற முதியவர், “எங்கட ஊருக்குப் போக்குவரத்துப் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன. ஆனால் பிள்ளைகளின் படிப்பு, வேலையில்லாப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை” என்றார்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP