யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் துண்டிக்கப்படும் அபாயம் (வீடியோ இணைப்பு)
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு வீதியான பண்ணை வீதி உடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இவ் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மேற்படி வீதிக்குக் குறுக்கே கடல் நீர் பாய்ந்த வண்ணம் உள்ளதுடன் காற்றும் அதிகளவாக வீசிக் கொண்டிருக்கின்றது.
இதனால் கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து வீதி குறுக்காக உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைத் தாக்கிய நிசாப் புயலினால் இவ் வீதி பாரியளவு மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன் அதன் ஊடான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டு கடல் வழியாகவே போக்குவரத்துக்கள் இடம்பெற்றன.
இவ்வாறு சேதமடைந்த வீதி இன்று வரை புனரமைக்கப்படாமல் உள்ளதுடன் உடைக்கப்பட்ட பகுதிகள் எங்கும் மண் மற்றும் கற்கள் கொண்டு செப்பணிடப்பட்டிருந்தது.
இதுவே தற்போது கடல் அலையின் தாக்கத்தினால் சேதமடைந்து உடைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இவ் வீதியினை மழைக்கு முன் புனரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்குப் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment