Thursday, February 27, 2020

S.G. சாந்தனின் சரித்திர இசைப்பயணம்...!!

சாந்தலிங்கம் என்ற இயற்பெயரினை கொண்ட சாந்தன் சிறந்த பாடகராக மட்டுமல்ல சிறந்த நாடக கலைஞருமாகவும் திகழ்ந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காலத்தில் முன்னணிப் புரட்சிப்பாடகராக விளங்கினார்.

1995ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் நட்சத்திரப் பாடகராக விளங்கினார். முதன்முதலில் 1972 இல்,செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் பாடலாக " மருதமலை மாமணியே முருகையா"... என்ற பாடலைபாடி தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்.
இதன் பின்னர் இவருக்கு வாய்ப்புக்கள் தேடிவர ஆரம்பித்தன. இவரது வீடு அமைந்துள்ள தெருவிற்கு வரும் "முகத்தார் வீடு " ஜேசுரட்ணம் என்பவர் சாந்தனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அழைத்துச்சென்று சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பாடவைத்தார்.
தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை சிக்கனப்பிடித்த சாந்தன் அன்றிலிருந்து வானொலி நிகழ்ச்சியின் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்தார். 1977இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர்,1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து தனது கலைப்பயணத்தை ஆரம்பித்து மேடைகளில் பாடல்களை பாட ஆரம்பித்தார். அதன் பின்னர் தனது பெயரிலேயே "சாந்தன் இசைக்குழு" ஆரம்பித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ஈழத்தின் புரட்சிப்பாடல்களை பாடி போராட்டத்திற்கு உணர்வூட்டினார். இதில் முதன் முதலாக பெரும் புகழை ஈட்டிய பாடலாக "இந்தமண் எங்களின் சொந்தமண்.." என்ற பாடலே இவருக்கு மிகப் பெருமை சேர்த்தது. அன்றிலிருந்து இறுதிப்போர் வரையில் புரட்சிப்பாடல்களை பாடி போராட்டத்திற்கு உரமூட்டினார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் பலமுறை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.புலம்பெயர் தேசங்களிலும்,ஈழத்திலும் தனது சிம்மக்குரலால் சிறப்புப்பெற்றார். அதிகளவான ரசிகர்களால் கவரப்பட்டவர். தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும்,எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டு வந்த பெருமை இவருக்கே உண்டு.
உடல்நலக்குறைவினால் தனது 57 ஆவது வயதில் இறைபதமடைந்தாலும், இசைரசிகர்கள் மனதில் என்றும் வாழ்வார்.
.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP