Wednesday, September 10, 2014

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு, "ஊடு கதிர்ப்படக் கருவி" வழங்கவுள்ள, திரு.கனகரட்ணம் குடும்பம்..!!

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக ஒரு "மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)" அவசியத் தேவையாகவிருப்பதாகவும், அதனைப் பெற்றுத் தருமாறும், புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு. சரவணபவன் அவர்கள், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலுள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள் மற்றும் தனிப்பட்ட சிலரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்ட புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸ்லாந்தில் வசிக்கும் திருவாளர்கள் "திரு, அருள், ரவி" மற்றும் இலங்கையில் வசிக்கும் "அப்பன்" ஆகியோர் இணைந்து இந்த சுமார் பத்தொன்பது (19) இலட்சம் ரூபா பெறுமதியான "மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியினை (Scanning Machine)" மேற்படி இயந்திரத்தை வழங்க முன்வந்திருப்பதுடன், இதனை மிகவிரைவில் செயற்படுத்துவதற்கும் உள்ளார்கள். எனவே மிகவிரைவில் மேற்படி கருவியானது புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கிடைக்கப் பெறவுள்ளது.

ஆரம்பத்தில் மேற்படி கருவியினை வைத்தியசாலைக்கு வழங்குவது குறித்த செய்தியினை வெளியிடவோ அன்றில் ஏனையவர்களிடம் தெரிவிக்கவோ விரும்பாத மேற்படி குடும்பத்தினர், "தாம்  பெயருக்காகவோ, புகழுக்காகவோ இதனை செய்யவில்லையென்றும், புங்குடுதீவு மக்களின் நன்மை கருதியே வைத்தியசாலையின் சேவைக்காகவே இதனை செய்வதாகவும்" குறிப்பிட்டிருந்தனர்.

இருந்த போதிலும் அவர்களுடன் மிக நீண்டநேரம் உரையாடிய "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்" தலைவர் ரவீந்தின், உப தலைவர் சுவிஸ்ரஞ்சன், ஆலோசனை சபை உறுப்பினர் வடிவேலு ஆகியோர் "இதனை பெயருக்காகவோ, புகழுக்காகவோ பகிரங்கப்படுத்தவில்லை என்றும், தாங்கள் செய்கின்ற இத்தகைய உதவிகளை நாம் பகிரங்கப் படுத்துவதன் மூலம், ஏனைய நாடுகளிலுமுள்ள புங்குடுதீவைச் சேர்ந்த மக்கள், தாமும் புங்குடுதீவின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு தாமாகவே முன்வருவார்கள் என்பதற்காகவே இதனைப் பகிரங்கப்படுத்துவதாகவும்" தெளிவுபடுத்தினார்கள். 

இதனைத் தொடர்ந்து அவர்களின் சம்மதத்துடன் இந்த விடயத்தினை நாம் பகிரங்கப்படுத்துகின்றோம். இதேவேளை மேற்படி குடும்பத்தினர் மிக விரைவில் சூரிச் அல்லது பார்ஸேல் மாவட்டத்தில் நடைபெறும் "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்" கலந்துரையாடலின் போது ஒன்றியத்தினால் கௌரவிக்கப் படவுள்ளார்கள் என்பதையும் இத்தால் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

இதேவேளை புங்குடுதீவுக்கு பௌஸர் ஒன்று வழங்கப்பட்டமை மற்றும்  புங்குடுதீவு வைத்தியசாலைக்கு "மருத்துவ ஊடு கதிர்ப்பட கருவி (Scanning Machine)" வழங்குவதற்கு ஒரு குடும்பத்தினர் முன்வந்தமை தொடர்பாக புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தன் பிரித்தானிய கிளை ஆலோசகர்களில் ஒருவராகிய, சொ.கருணைலிங்கம் அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இதன்போது அவர், 

"இது ஒரு நல்ல காரியமெனவும், மேற்படி உதவியினை வழங்கிய குடும்பத்தினரது புகைப்படங்களை நாம் இணையங்களில் பகிரங்கப்படுத்தி அவர்களுக்கு கௌரவத்தையும், பெருமதிப்பையும் வழங்கி மரியாதையையும் செலுத்துவதன் மூலம்தான் ஏனைய நாடுகளிலுள்ள புங்குடுதீவைச் சேர்ந்த மக்களும் தாமாகவே முன்வந்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள் எனவும்" தெரிவித்தார்.

அத்துடன் "மேற்படி பௌஸர் வாங்குவதற்கு பெரிதும் நிதிப் பங்காற்றிய ரவீந்திரன் (சாய்ரவி), சிறீதாஸ் (இம்போர்ட் தாஸ்), சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பழைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறியதுடன், இத்தகைய சேவைகள் தொடர வேண்டுமெனவும் தமது நாட்டிலும் தாங்கள் இதுபோன்ற சேவைகளை தொடர்வதற்கு முயற்சித்து வருவதாகவும், உலகெங்கும் பரந்து வாழும் புங்குடுதீவு மக்கள், அந்தந்த நாடுகளில் உள்ள புங்குடுதீவின் ஒன்றியங்களுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் சார்பில் அதன் செயலாளர் சு.சஸ்பாநிதி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினர், உண்மையிலேயே தற்போது பெயருக்கேற்ப "விழிப்புடன் செயல்படுவது", எமக்கும் ஓர் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தருவதாகவும்,  

இந்த "மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி"யை (Scanning Machine) ஒரு குடும்பத்தினர் தமது சொந்த செலவில் வழங்கியமைக்காக நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிப்பதாகவும் கூறிய அவர், இது உண்மைலேயே மிகவும் சந்தோசமான விடயம்.., 

இதன்மூலம் புங்குடுதீவு மக்கள் மட்டுமல்ல வேலணை, நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு போன்ற அனைத்து தீவுப் பகுதி மக்களும் பயனடைவார்கள். அந்தக் குடும்பத்தினருக்கு எமது "பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்" சார்பில் எமது வாழ்த்துக்களையும், ஆசீவாதத்தையும் தெரிவிக்கிறோம்" எனவும், 

அதேபோல் "குடிநீர் பவுசரை" சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் வாங்கிக் கொடுக்க பெரும் நிதிப் பங்களிப்பாற்றிய இரவி (சாய் ரவி), சிறிதாஸ் (இம்போட் தாஸ்) ஆகியோருக்கும் மற்றும் நிதிப் பங்களிப்பாற்றிய உங்களின் பழைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது "பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்" சார்பில் எமது நன்றிகள் எனத் தெரிவித்ததுடன் இது நல்லதொரு விடயமெனவும், பவுஸர் வழங்கிய நிகழ்வினை இணையங்களில் பார்த்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறினார். 

அத்துடன் இதேபோன்று இந்த "மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி"யை (Scanning Machine) ஒரு குடும்பத்தினர் தமது சொந்த செலவில் வழங்கியமைக்காக, அவர்களை கௌரவிக்க சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய செயலென்றும் கூறி, இந்நடவடிக்கைகள் தொடர வேண்டுமெனவும்" கேட்டுக் கொண்டார். 

மேலும் "தமது நாட்டிலுள்ள புங்குடுதீவு ஒன்றியத்தின் மூலம் ("பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்" சார்பில்) பல இலட்சம் ரூபா செலவில் புங்குடுதீவு மகா வித்தியாலத்துக்கான சுற்றுமதில் உட்பட பல வேலைகளை மேற்கொண்டு வருகிறோம்" எனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை "பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்" அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் திரு.மதி அவர்கள் நேற்றையதினம் எமது சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பிரதிநிகளை நேரில் சந்தித்து "தமது வாழ்த்துக்களையும், நன்றியையும்" தெரிவித்துக் கொண்டதுடன், 

"எதிர்காலத்தில் வெளிநாட்டில் உள்ள அனைத்து புங்குடுதீவு ஒன்றியங்களும் இணைந்து செயற்படுவதன் மூலம் புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் நாம் பல நல்ல காரியங்களை செய்ய முடியுமெனவும், இதுகுறித்து தமது ஒன்றியப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தமது முடிவுகளை அறிவிப்பதாகவும்" தெரிவித்தார். 
நன்றி,

இவ்வண்ணம்... 
த.தங்கராஜா,
செயலாளர், 
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP