Thursday, January 16, 2014

முப்பொழுதும் தாய் நினைப்போடு...

"ப" வடிவில் அமைந்து வாவென்று எல்லோரையும்
வரவேற்று உபசரித்து, மருந்தாயினும் விருந்தோடு
உண்ணும் பெருங் குணம் கொண்ட புங்குடுதீவுத்
தாயவளை வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!

முப்பத்தி நான்கு சதுர கிலோ மீற்றர் பரப்பளவு
கொண்டவள். எப்பொழுதும் என் நெஞ்சப் பரப்பளவில்
நீக்கமற நிறைந்தவள். முப்பொழுதும் தாய் நினைப்போடு
வாழ்ந்து வரும் குழந்தையைப் போல், இப்பொழுது
நினைத்தாலும் என் தாய் மடியின் சுகம் எங்குமில்லை!

மேட்டு நிலங்களில் தெங்கும் பனையும் இளநீரும்
நுங்கும் சுமந்து குலை குலையாய்த் தள்ளி வான் முட்டும்
அதை அள்ளிப் பருகினால் அடடா தேன் சொட்டும்! – அவ் விருட்சங்கள்
மேலே காக்கையினங்கள் தங்கள் வாழ்க்கை விருத்திக்காய்
கூடு கட்டும்! காகத்திற்கும் அது போன்ற பறவைகட்கும்
வாழ்வழித்து எங்கள் தாகத்திற்கும் வாழ்வழிக்கும்
பெரு விருட்சங்கள்! நிறைந்த ஊர்!

சோவென்று அடிக்கும் சோளகக் காற்றுக்கும்
அசையாது நிற்கும் சொத்துக்கள்! நம் முன்னோர்
தம் காணிக்குள் பேணி வளர்த்த ஊட்டச் சத்துக்கள்
பார்க்கும் போது பளபள என்றிருக்கும் முத்துக்கள்!

மாவும் வேம்பும் இத்தியும் அரசும் சுத்திச்
சுத்தி எங்கும் நிறைந்து பெருஞ்சோலை நிலமாய்க்
காட்சி தரும். சாலைகள் தோறும் ஆலும் வேலும்
மருதமும் நிழல் பரப்பி மதியமும் மாலை போல் தோன்றும்!
இருந்திளைப்பாறும் வழிப்போக்கருக்கு நிழற்குடை
பிடித்துக் களைப்பினை ஆற்றும்!

கல்விச்சாலைகள் பயின்று களைத்து வரும்
மாணவர்க்கு ஆனவரை சேர்ந்து சாமரம் வீசும்!
மாமரம் உலுப்பி மாம்பிஞ்சுகளை உண்ணும் மாணவர்
பற்களும் கூசும்! இதமான தென்றல் வீசும்! - இளங்
கிள்ளைகளும் அங்கு காதல் மொழி பேசும்!

மரத்தடிக் கேணிகளில் வாலிபர் கூட்டம்
நீச்சல் போடுகின்ற கூச்சல் கும்மாளம்! – அந்த
குளத்தடிப் பிள்ளையார் கோவிலிலே அவியல்
படையல் தாராளம்! நீச்சல் முடித்த வாலிபர் கூட்டம்
கூச்சலின்றித் தொப்பை அப்பனிடம் சரணம்! தோப்புக்கரணம்!

கண்ணகை அம்மன் கோவில் கடற்கரையோ
வெண்மணலால் எங்கும் போர்த்திருக்கும் -அவ்
வெண்மணல் மேலே காற்றின் கரங்கள் அழகாய்
கோலம் போட்டிருக்கும்! அக்கோலங்கள் மேலே
இளம் பெண்களின் பாதச்சுவடுகள் பதிந்திருக்கும்
அச்சுவட்டின் மீது பாதம் பொருத்திக் காளையர்
மனமோ மகிழ்ந்திருக்கும்!

கடற்கரைக் காற்று எழுந்து உடற்சுகம் தேற்ற
உடன் மருத்துவமனை ஓன்று அமைந்திருக்கும்!
மருந்தின் மகத்துவமா? காற்றின் மருத்துவமா
நோயாளி உடல் தேறி எழுந்திடுவார்! இயற்கைச்
சூழலில் அமைந்த மருத்துவ மனையோ நிரந்தர
மருத்துவரின்றி வாடுகிறது!

மக்கள் சேவையை மகேசன் சேவையாய்
போற்றும் மருத்துவரைத் தேடுகிறது!
போர்வையை மேனியில் போர்த்த படி கோர்வை
மீனுக்குத் தோணிக்காரன் வருகைக்காய்
இருப்பது ஒரு சுகம்! வீச்சு வலைகாரன்
போகிற போக்கில் தாமும் போய், அவன் வலை வீச
கயலா? சிறையா என்று கேட்டு வாங்குவதில் ஒரு சுகம்!
குருத்தோடி வந்து குருத்தோடி விட்டுப் பூவரசு
நிழலில் ஆறஅமர இருந்து ஒரு சுருட்டைப்
பற்ற வைத்து மீண்டும் எடுத்தோடி வரும்
மீனுக்காய் காத்திருப்பதில் ஒரு சுகம்!

உப்புக் கடலில் உடன் பிடித்த மீனைக்
கழுவி, அம்மா அம்மியில் அரைத்து வைத்த
குழம்போடு குழைத்து ஒருபிடி பிடிப்பதில்
உள்ள சுகம் சொல்லி மாளாது! அதில்
எங்கள் மண் வாசனையும் கடல் வாசனையும்
சேர்ந்தே மணக்கும்!
நுங்கின் குலை போல இளநீர்க் குலை போல
அவ்வளவு நெருக்கமாய் உருக்கமாய் பதினேழாயிரம்
பேர் சின்னஞ் சிறு கூட்டில் அன்பின் பெருகக்மாய் இருந்தோம்!
தொண்ணூறு காலப்பகுதி ! என் தாயவளுக்கு
கண்ணேறு பட்டபகுதி ! கண் நூறு படலாம்.
கண்ணேறு படலாமோ ?

பெண்ணோடு ஆண்களும் அவர் குழந்தைகளும்
சேர்த்து வைத்த செல்வமெல்லாம் அம்மண்ணோடு
மனை விட்டு நெடுந்தூரம் போனாரே! போனவர்
வரவேண்டும் ஐயனாரே ! புது வாழ்வு பெற வேண்டும்
ஐயனாரே! எல்லையில் காவல் நிற்கும் ஐயனாரே!
எல்லையில்லா மகிழ்வு பெற்று வாழ வேண்டும் ஐயனாரே!

ஒல்லாந்தரினால் அன்று மிடில் பேர்க் என்று
அழைக்கப்பட்ட நாம் வாழும் சிறு குடில்
போரினால் அழிந்ததை விட சமூக விரோதிகள்
எனும் நச்சு வேரினால் அழிந்ததே ஏராளம்! எழுபதுகனின்
பின் குடிசைகள் அகன்று கல் வீடுகளால் நிறைந்து
சீதேவி போல் சுடர் விட்டாள் என் தாய்!

இன்று ஓடுகள், நிலைகள்,யன்னல்கள் யாவும்
உருவப்பட்டு, கணவனையிழந்த கைம் பெண்ணாய்
தலைவிரி கோலமாய் இடர்ப் பட்டுத் தவிக்கின்றாள்!
முன்னர் இருந்த நிலை தோன்ற இன்னும்
எத்தனை காலம் தான் பிடிக்குமோ ?

தட்டிப் பறிப்பார் எவருமின்றிக் கடல் வளம்
கொட்டிக் கிடக்கிறது ! மட்டியில் இருந்து
சங்கு வரை கடல் தாய் மடியில் பரவிக் கிடக்கிறது !
கட்டித் தங்கம் வெட்டி எடுப்பது போல், ஒட்டி
ஓரா, சுறா, பாரையென்று முட்டி மோதும் அலை கடலைக்
கட்டியாள வேண்டும்! வேலை வெட்டியின்றி இருப்போருக்கு

வேலை வழங்க வேண்டும்!
பண்பட்ட நிலவளம் உண்டு! பண்படுத்துவாரின்றி
பாழ் பட்டுப் போச்சு ! யார் கண் பட்டதோ?
புண்பட்ட மனங்களோடு மக்களங்கே – அறிவாலும்
ஆற்றலாலும் பொருளாதார வளத்தாலும் நிலங்களையும்
மனங்களையும் புனருத்தாரணம் செய்து மேம்படுத்துவோம் வாரீர்!

சர்வதேசங்கள் எங்கும் இருக்கின்ற ஊரின்
முன்னேற்றச் சங்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து
நல்ல சாதனை செய்ய வேண்டும்! நற் போதனை
செய்ய வேண்டும்! ஊரின் வேதனை தீர்க்க வேண்டும்!

சுவிசிலிருந்து மதிமுகன்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP