Monday, November 4, 2013

புங்குடுதீவின் முதற்பண்டிதர்

எழுதியவர் - வித்துவான் சி ஆறுமுகம்
[ஈழநாடு, யாழ்ப்பாணம்; 1982]

நல்லாசிரியர்கள் நல்வழிகாட்டி - தமிழகத்தில் சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்கள் ‘சான்றோர்கள்’ என அழைக்கப்பட்டனர். இன்றும் நம்மிடையே வாழும் பண்டிதமணி உயர்திரு. சி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் உயர்திரு சி இ சதாசிவம்பிள்ளை போன்ற பெரியோர்கள்,

சான்றோர் வரிசையைச் சார்ந்தவர்கள். இவ்விருவரும் ஆறுமுக நாவலர் பெருமானின் மா...ணவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மாணவரே அண்மையில் அறுபத்தெட்டு வயதில் அமரரான பண்டிதர் திரு மு ஆறுமுகனார் அவர்கள். இவர் புங்குடுதீவு பெற்ற முதற்பண்டிதர். தலைசிறந்த சைவசித்தாந்தப் புலவர், சித்திர வித்தகர், சித்தவைத்தியர், இசைக்கலை வல்லுநர், நல்லாசிரியர், எம்போன்ற ஆசிரியர் பலரை உருவாக்கிய ஆசிரியர், சோதிடக்கலை வல்லுநர்.

புங்குடுதீவில் ஐம்பது ஆண்டுகளின் முன் தன் வீட்டிலேயே ஒரு படிப்பகம் உண்டாக்கி, மாணவர் பலருக்கு இலவசமாக சனி, ஞாயிறு நாட்களிலும், இரவு வேளைகளிலும், விடுமுறை காலங்களிலும் பாடம் நடத்தித் துணைபுரிந்தவர் ஆறுமுகனார். மகாவித்துவான் கணேசையரிடம் இலக்கண நூல்களை ஐயம்திரிபு இன்றிக் கற்றவர் பண்டிதர் ஆறுமுகனார். பண்டிதமணி அவர்களிடம் சங்க நூல்களையும், காப்பியங்களையும், புராணங்களையும், பிரபந்தங்களையும் நன்கு கற்றுத்தெளிந்த பண்டிதர் ஆறுமுகனார், சங்க நூல்களில் ஒன்றாகிய அகநானூற்றில் வரும் விளக்கத்திற்கு அரிய பாடற்பகுதிகளைத் தம் நுண்மதி கொண்டு விளக்கிப் பிறருக்கும் எடுத்துக்கூறிப் பாராட்டும் பெற்றவர். “வேளாப்பார்ப்பான்” என்று வரும் அகநானூற்றுப் பாடற்பகுதிக்கு இவர் கூறிய உரைப்பொருத்தங் கண்டு அறிஞர் மு வரதராசன் அவர்கள் எழுந்து பண்டிதர் ஆறுமுகனாரைக் கட்டித் தழுவியமை உண்மை வரலாறு.
பண்டிதர் ஆறுமுகனாரின் பிறப்பிடம் புங்குடுதீவு. வழிகாட்டியாக விளங்கிய பண்டிதர் ஆறுமுகனார் கலங்காத உள்ளம் படைத்தவர்; அச்சம் அறியாதவர்; மரபுக் கவிதைகள் வரைவதில் பேராற்றல் படைத்தவர். தீவுப்பகுதி, திருநெல்வேலி, இணுவில், விடத்தல்தீவு, கொழும்பு, கிளிநொச்சி, பொலநறுவை, வவுனியா, அனுராரபுரம் முதலாம் இடங்களில் அவர் வாழ்வின் பெரும்பகுதி பயன் பெற்றது. அவர் தெளிவுறப்பேசுவார். கட்டுரை வரைவார். எந்நேரமும் எப்பொருள்பற்றியும் பேசவும் எழுதவும் வல்லவர் ஆறுமுகனார். படிப்பித்தற்கலை அவருடன் கூடப்பிறந்தது. அறுபத்தெட்டு ஆண்டுகள் நிரம்பிய பண்டிதர் அமரராகிவிட்டார்.
அவர் உண்டாக்கிய தோப்பில் நானும் ஒரு நன்மரமாக நிற்கவேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நன்மரங்கள் தோன்றும். அவர் ஆசை நிறைவேறும். அவர் ஆன்மா அப்போதுதான் சாந்தி அடையும்!


நன்றி :Rasan Sivasamy

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP