அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவனும் புங்குடுதீவு ராஜராஜேஸ்வரி வித்தியாலயமும் நேற்று மீண்டும் ஆரம்பம்
23 வருடங்களின் பின்னர் அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை இருந்து மீளவும் செயற்படத் தொடங்கியுள்ளது.
அல்லைப்பிட்டியின் முதலாவது பாடசாலையான இப்பாடசாலை கடந்த 1990 ஆம் ஆண்டின் பின்னர் ஆரம்பிக்கப்படாமலிருந்தது.
யுத்தத்தினால் பலத்த சேதத்திற்கு உள்ளாகிய இப்பாடசாலை மீண்டும் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதிபருடன் மூன்று ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பாடசாலை தரம் ஒன்று, தரம் இரண்டு வகுப்புக்களில் 30 மாணவர்களுடன் செயற்படத்தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புக்கள் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளன.
இவ் ஆரம்ப நிகழ்வில் தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை வண. ஸ்ரனிஸ்லோஸ் பிலிப், அதிபர் எஸ். பத்மநாதன் ஆகியோர் மங்கல விளக்கேற்றினார்கள்.
தொடர்ந்து பங்குத்தந்தை ஸ்ரனிஸ்லோஸ் பிலிப் வழங்கிய விசேட ஆராதனை இடம்பெற்றது. நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை நேற்றைய தினம் புங்குடுதீவு ராஜராஜேஸ்வரி வித்தியாலயமும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. மீள்குடியமர்ந்த பின்னர் தீவுப் பகுதியில் தற்பொழுது 61 பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment