Saturday, September 8, 2012

யுகம் கடந்தும் வாழ்வான் கணேசன்- சுவிஸிலிருந்து புங்கையூர் மதி

தஞ்சையூர் நிமிர்ந்து நிற்கும் பேராலயம் போல்
யுகம் கடந்தும் நிலைத்து நிற்கும் புகழால்
புங்கையூர் ஸ்ரீகணேச மகா வித்தியாலயம் - வானிறங்கும்
கங்கையாளே வா! குடமுழுக்காட்டு!

வாஞ்சையோடு வாவென்று வளமான
கல்வியூட்டிய கணேசனுக்கு வயது நூறு! மங்கையரே!
ஆடவரே! புதுநூறு மலர் பறித்து மாலை கட்டிப் போடுங்கள்
நித்தம் நித்தம் புதுப் பாட்டுக் கட்டி ஆடுங்கள்.
கால வினை தீரக் கணேசனே துணை
கல்விக் குறை தீர்த்த ஸ்ரீகணேசனை நினை!
திண்ணைப்; பள்ளிக் கூடமாய்க் கருவாகி எண்ணற்ற
பெரியோரின் முயற்சியினால் அழகிய
வண்ண வித்தியாலமாய் உருவாகி – நம் மண்ணில்
இரண்டாவது மகாவித்தியாலயமாய் விளங்கும் ஸ்ரீகணேசா!
நாளை நீ கல்லூரி ஆவது திண்ணம்.
அதற்கான கடும் உழைப்பும், கடமையும்
காத்துக் கிடக்கிறது உங்கள் முன்னம்.
கால வினை தீரக் கணேசனே துணை
கல்விக் குறை தீர்த்த ஸ்ரீகணேசனை நினை!
விஞ்ஞானம் வளர்ந்து வியாபித்து விட்ட
யுகத்தில் வாழுகின்றோம்.
அஞ்ஞானம் அகற்றி எழுத்தறிவித்து மெய்ஞ்ஞானம் ஊட்டி
வளர்த்த கணேசனுக்கு இன்று ஒரு நூற்றாண்டு!
அவனை எஞ்ஞான்றும் மறவோம்.
ஞாலத்தின் அவையெங்கும் நனிதிருக்கச் செய்து
அறிவூட்டிய தந்தை! அந்தக் கணேசனென்றால்
அதில் என்ன விந்தை!
கால வினை தீரக் கணேசனே துணை
கல்விக் குறை தீர்த்த ஸ்ரீகணேசனை நினை!
குடத்துள் விளக்காய் ஒளிர்ந்தவரையெல்லாம்
குன்றின் விளக்காய் சுடரச் செய்தான்.
கிணற்றுத் தவளை போல் வாழாமல்
உலக வளப்பம் யாவும் நமக்கறிவித்தான்
போ...போவென்று எம்மை அனுப்பினாள் அம்மை!
வா...வாவென்று எம்மை வாரியணைத்து
வாயார ஊட்டிய கணேசனை மறப்போமா?
நூற்றாண்டு காணும் அவனை,
வாயார வாழ்த்தாமல் இருப்போமா?
வானோர்கள் உண்ணும் அமிழ்தம் அல்லவா
கணேசனிடம் உண்டோம். சாவா மருந்தல்லவா! அது
சாகும் போதும் உண்ணும் விருந்தல்லவா!
கால வினை தீரக் கணேசனே துணை
கல்விக் குறை தீர்த்த ஸ்ரீகணேசனை நினை!
இன்று மணம் முடிப்போரை நூறாண்டுகள் வாழ்கவென்போம்
அன்றே எம் மண்ணில் தடம் பதித்து
எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்து, நூற்றாண்டாய்
எட்டு வகைச் செல்வத்துள் ஒன்றான கல்வியை
நன்றே நமக்கு ஈந்தளித்தவனை
நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்போம்.
ஞானமும் கல்வியும் நமக்களித்த கணேசனவன்
வானமும் வையமும் உள்ளவரை நீடுவாழ்க!
அறிவுக்கண் திறந்து விட்டவனுக்கு
அகவை நூறாம்! ஏற்றி விட்ட ஏணிப்படியை
நினைந்து போற்றுதற்குக் கிடைத்த அரிய பேறாம்!
கால வினை தீரக் கணேசனே துணை
கல்விக் குறை தீர்த்த ஸ்ரீகணேசனை நினை!
வாரிதி வந்தணைக்க வாரி வழங்கும் ஊரல்லோ
மாரியும் தப்பாமல் பொழிந்து கொடுக்க
ஏரின் உழவரும் ஏர் பிடிக்கும் ஊரல்லோ! இவ்
ஊரின் கீழ்த்திசையில் உதித்தான் கணேசனவன்
பாரில் நாம் சிறப்புற, யுகம் கடந்தும் வாரி வழங்குவான்
கல்வியை விருப்புற, வாழ்த்துரைக்க வார்த்தையில்லை
செம்பருதி போல் வாழி நீ!
காணமும் முத்தும் மணியும் கோடானு கோடியும் இருந்தென்ன!
உன்னால் நாமடையும் புகழுக்கு இவையெல்லாம் ஈடாகுமா?
வாழீ நீ! உலகு போற்ற வாழீ! வாழீ நீ! யுகம் கடந்தும் வாழீ!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP