Sunday, July 22, 2012

நினைவகலா எனதூர் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.


எண்திசை யாவும் பூத்துக் குலுங்கும்
எனதூரழகைப் பாடுகின்றேன் - நல்ல
தொண்டுகள் புரிந்திடும் தூய உள்ளம் கொண்ட
எனதூர் மக்களைத் தேடுகின்றேன் - நான்
நெடுநாளாய்த் தேடுகின்றேன்!


ஆலயத்தில் தேவாலயத்தில் நல்ல
அன்பினையே அங்கு போதிப்பார்
கல்விச் சாலைகளில் கலைக் கூடங்களில்
நல்லறிஞர்கள் உருவாகிப் புதுமைகள் சாதித்ததை
அந்தப் பள்ளிப் பருவத்தை மறக்க முடியுமா?

காலைக் கதிரவனும் அந்த மாலை மதியவளும்
புங்கைக் கடலில் ஒளிரும் காட்சி
அதைக் கண்டு களித்து மகிழ்ந்திருந்த
வாலைப் பருவத்து நினைவுகள்
நெஞ்சினில் இன்னும் நிழலாடுகிறது!

மடத்துவெளி வயல் நெல்லும் அந்த
மணற் கடல் நீலநண்டும்
உண்டு சுவைத்தவன் நான் - அதை
இன்று நினைத்தாலும் நாவினில் எச்சில் ஊறும்!

கேரதீவுக் களிமண் கொண்டு வீடு கட்டியதை
அங்கு குலை குலையாய் விளைந்திடும்
ஈச்சம் பழம் பிடுங்கியுண்டு பசியாறியதை
ஊரதீவுப் பனங்கிழங்கும் பதனீரும்
கண்டாலே உருசிக்கும்! உண்டோரை மயக்கும்!
அதை நினைத்தாலே இனிக்கிறது
கண்ணில் நீர் பனிக்கிறது!

தீயவழியில் செல்வோர்க்கு நெறி காட்டுவான்
நல்வழி காட்டுவான் - இவன்
தடம் மாறிச் செல்வோர்க்குக் குறிகாட்டுவான்!
குறிகாட்டுவான் துறையிலிருந்து வடதாரகைப்
படகின் மேல் தளத்தில் நின்று
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கும் போது
அலை வந்து தாலாட்டிச் சென்றதை – அந்த
ஈர நினைவுகள் இன்னும் உலரவில்லை!

வல்லன் உடன் பெருங்காடு
இவர் என்றும் வாழ்வார் சீரோடு!
கொல்லும் பகை எதிர்த்து வாளோடு
நிற்கும் வீராமலை என்றும் தோளோடு!

உப்பு விளைந்திடும் நடுவுத் துருத்தி
உடன் வெங்காயமும் இங்கு நல் அபிவிருத்தி!
மெல்லப் போனால் இறுப்பிட்டி
இவர் எங்கும் வாழ்வார் புகழ் நாட்டி!
என் ஊரில் உள்ள ஒவ்வொரு இடமும்
என் கால்த் தடம் பதிந்திருக்கிறது
அந்த நினைவுகள் நெஞ்சில் பொதிந்திருக்கிறது!

ஆலடிச் சந்தியில் வந்து நின்றால் - அது
உலக நடப்பைத் தினம் சொல்லும்
நல்ல கலைஞர்களை இனம் காட்டி
அம்பலவாணர் அரங்கு விளங்கும் - அங்கு
தொல்லறிவாளர் சொற்போர் தினம் முழங்கும்!
இந்த அரங்கில் தான் கவிஞர் வில்வரெத்தினம் குழுவினரின்
முகமூடிகள் நாடகம் பார்த்து விட்டு பொடி நடையாக
வீடு சென்றதும் என்றும் அழியாத
கோலங்களாய் இன்னும் என் நெஞ்சில்!

சங்கார்த்த கேணி, வீரன் புளியடி,
கொண்டதறைப் பரப்பெங்கும் நன்னீர்
ஊற்றுக்கள் சுரந்து கிடக்கும்
அங்கு குலமகள் போலே, நிலமகள்
பூத்துக் குலுங்கிக் காற்றிலசைந்து நடக்கும்!
புதினெட்டு வருடங்கள் கடந்தாலும்
அந்தப் பசிய நினைவுகள் என்னை
விட்டுக் கடக்கவில்லை. கடக்காது!

ஏழ்கடல் பொங்கி ஆர்ப்பரித்தாலும்
எங்கள் ஊர் ஆழ்கடல் வைரவர்
அழிந்ததேயில்லை. இது அற்புதம் அதிசயம்!
அந்தக் கோயிலில் சித்திரைக் கஞ்சி
குடித்ததை நெஞ்சம் மறக்குமா?

குடத்தை நிறைக்கின்ற பசுக்கள் இருக்கின்ற
இடத்தைத் தேடி வந்து சேரும்!
குடத்துள் விளக்கல்ல, குன்றின் விளக்காய்
நம்மக்கள் வந்தோரரை வரவேற்று
உபசரிக்கும் பாங்கு நினைவலைகளாய்
நெஞ்சில் நித்தம் வந்து வந்து மோதும்!

சித்திரை மாதத்துக் கதிரவனின்
கொடுPர ஒளிவீச்சில்
வேப்பமர நிழலில் இருப்பது ஒரு சுகம்!
ஆடிக் காற்றில் அள்ளி நுரை வீசும்
எங்கள் ஊர் கடற்கரை நோக்கி
எதிர் நடை போடுதல் ஒரு சுகம்!
இழந்த சுகங்கள் இனி என்று வரும்?

மாரி காலம் வந்தால் போதும் - அந்தக்
கந்தசாமிக் கோயில் குளத்தில்
பள்ளி விட்டதும் வந்து துள்ளிக் குதித்து
நீந்தி விளையாடியதும்
மகிழ்வான காலங்கள் அல்லவா!

மார்கழியில் எங்கள் ஊர் தோட்டங்கள்
வயல் வெளிகள் பச்சை ஆடை கட்டி மகிழும்!
அங்கு பச்சைக் கிளிக் கூட்டம் வந்து
பாட்டுப் பாடி மகிழும்!

சோளகம் அடித்தால் எங்கள் கடல்
அலை புரண்டு துள்ளும் - அதைப்
பார்த்து இரசிக்க மனதில்
ஆசை அலை அடித்துக் கொள்ளும்!
தென்னைகள், பனைகள் உருத்திர தாண்டவமாடும்
பட்டங்கள் விண் கூவிக் காற்றிலே கூத்தாடும்!
இந்த நினைவுகள் என்றுமே நீங்காதவை.

விடுதலை வீச்சுக் கொண்டவர் எம்மவர்
தலைவனின் வழியிலே செல்வோம்
கெடுதலை அழித்து நல்லதைச் செய்து
அண்ணனின் பாதையில் வெல்வோம்!
இங்கிருந்தாலும் என் உணர்வெல்லாம் அங்கு தான்.

ஒருதடவை என் தந்தை என்னிடம்
சேவல் எப்படிக் கூவும் என்று கேட்டார் - நானும்
பதிலுக்கு கொக்கரக்கோ என்றேன்.
இல்லையென்றார் அப்போ எப்படி என்றேன்!
சொக்கநாதா .... என கூவும் என்றார்.
நானும் நினைத்துப் பார்த்தேன்
அது போலவே இருந்தது. அந்த இனிய நினைவுகள்
பசுமரத்தாணி போல நெஞ்சிலே பதிந்துள்ளது!

கடல் வந்து தாலாட்டும் பொன் கொடுதீவு
என் உடலோடு உயிரான புங்குடுதீவு!
ஈழத்தில் இதுவோர் சிறு கூடு – அங்கு
சிறந்து விளங்கிடும் தமிழ்ப் பண்பாடு!
என் ஊரே! என் உயிரே!
என் மண்ணே! எனதிரு கண்ணே!
எனை நீ தாங்கிக் கொண்ட ஆண்டுகள் இருபது
உன் மடியில் வந்து மரணித்தால், அதுவே எனக்கு வீடுபேறு!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP