Sunday, March 18, 2012

அறிவுத்திறன் போட்டிகள் 2012 - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) பாரதி விளையாட்டுக் கழகம், அம்பாள் விளையாட்டுக் கழகம் (பிரான்ஸ்) ஆகியன இணைந்து 3 வது தடவையாக கடந்த 25.02.2012 சனிக்கிழமை காலை 9 மணிக்கு 50 Rue Torcy, Paris 18 எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான அறிவுத்திறன் போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

காலை 9 மணிக்கு புங்குடு தீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) தலைவர் திரு ஏகாம்பரம் மதிவதனன், செயலாளர் திரு தளையசிங்கம் ஞானச்சந்திரன் மற்றும் அறிவுத்திறன் போட்டிகளின் பிரதம நடுவர்களான ஆசிரியர் திரு தம்பிராசா சங்கரராசா, ஆசிரியர் கனகசபை அரியரெத்தினம் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக 9 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியும், ஓவியப் போட்டியும் அவர்களின் வயதிற்கு ஏற்ப மூன்று பிரிவுகளாக (ஏ.பி.சி) பிரிக்கப்பட்டு நடைபெற்றது.


தொடர்ந்து 12 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியும், சொல்வதெழுதல் போட்டியும் அவர்களின் வயதிற்கேற்ப இரண்டு பிரிவுகளாக  (ஏ,பி) பிரிக்கப்பட்டு நடைபெற்றது.


தொடர்ந்து 15 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும், 18 - 22 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான தமிழ் , பிரெஞ்சு மொழிகளுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இப் போட்டியின் இடைவேளையின் போது பார்வையாளராக வருகை தந்திருந்த திரு.ராஜ்குமார் அவர்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி சிறப்புரை வழங்கியிருந்தமை போற்றுதற்குரிய விடயமாகும். புலம் பெயர்ந்து நாம்  வாழுகின்ற போதிலும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) தனது பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது பிரான்ஸ்வாழ் அனைத்து தமிழ் இளம் சந்ததியின் தமிழ் மொழி வளர்ச்சிக்காக இப் போட்டிகளை நடத்துவது அவர்களின் பரந்த மனப்பான்மையையும், அவர்களின் தமிழ்ச் சேவையின் மூலம் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.


அதே நேரத்தில் இப் போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகளின் பெற்றோர்களை நாம் போற்ற வேண்டும். காரணம் குறித்த நேரத்தில் போட்டிகளை நடத்துவதற்கு பிள்ளைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்து வந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. இப் போட்டிகளின் நுற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பங்குபற்றியது சிறப்பு அம்சமாகும்.

இனிவரும் காலங்களில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்)  மேலும் இவ்விதமான போட்டி நிகழ்வுகளை நடத்தி அதில் பிரான்ஸ் வாழ் தமிழ் இளம் சந்ததியினர் அனைவரும் பங்குபற்றி எமது தமிழ் மொழியை நலிவடையாமல் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

இப்படியான சமூக சேவை மன்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். எங்கள் தமிழ்மொழி காலப் போக்கில் காணாமல் போகும் நிலை ஏற்பட்டால் பேணிப்பாதுகாப்பது உங்கள் கையில் இருக்கிறது என்பதனை வருங்கால இளம் சந்ததியினரே மறந்து விடாதீர்கள்.

நடைபெற்ற அறிவு திறன் போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றிய ஆசிரியப் பெருமக்களின் சேவை போற்றுதற்குரியது. இந்நிகழ்வுளின் பார்வையாளராக பங்குபற்றிய எனக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) இன் சேவையையும், மக்களின் ஒற்றுமையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இவர்களின் சேவை தொடர்ந்து எமது இளம் சந்ததிக்கு கிடைப்பதுடன்,  மேலும் பல நல்ல செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்மென்று நல்லாசி கூறுகின்றேன்.
வாழ்க ஒன்றியம் வளர்க தன்னலமற்ற சேவை.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP