Sunday, December 11, 2011

மடத்துவெளி முருகனுக்கோர் பாடல் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

மடத்து வெளியூர் குடிகொண்ட முருகா! எங்கள்
மனத்து வெளியெங்கும் குடியிருக்கும் தலைவா! எங்கள்
இனத்து இழிநிலையைப் பாராய்! நினைந்து நினைந்து
உனைத் தொழுதோம். நிம்மதியை மீட்டுத் தாராய்!
அனைத்துத் துன்பமும் போக்கி ஆதரித்து எம்மை
அணைத்து ஆறுதல் தரவேண்டும் தலைவா!
ஆனைமுகன் தம்பியே! மானமுடன் வாழவிடு நம்மையே!

வரவேற்பு முகப்பில் குடி கொண்ட பாலனே!
சிரமேற் கைகூப்பி உன்னடி பணிந்தோம்; வந்தாரை
வாழவைத்த குடியின்று நொந்தாரைப் போல் சீரழிகிறதே!
செந்தாரைக் கழுத்தில் சூடிக் கொண்டவனே! உன்தாள்
பணிந்தெழுந்தோம். எம் தாய் தந்தையர் வாழ்ந்த பதியில்
எமை மீண்டும் வாழ வைப்பாயா? வந்த துயர் யாவும் பொடியாக்கி சிந்தை வெளியெங்கும் துலங்கக் குடிகொள்வாய் குகனே!

பச்சைப் பசேலென நெல் வயல்கள் சூழ்ந்த பதியில்
இச்சை தீர்த்தருள பச்சை மயில் மீதேறி வருவாயா?
உழுது விளைவித்து உண்டு மகிழ்ந்தவர் அழுது
தொழுதடிமை செய்குவதோ? பிச்சைப் பாத்திரம்
ஏந்த விட்டதேனோ? முச்சை அறுந்த பட்டம் போலானோம்.
நித்தம் தொழுதவர் தம் பித்தம் தெளிய வைத்து
சித்தம் தெளிவிப்பாய்! சிவபாலனே!

முகத்துக்கு நேரே முகம் பார்த்துக் கைகூப்பி வரவேற்ற
எங்கள் தேசத்து ஊர்களின் முகப்பு வாயில்களில்
விழி மூடிய புத்தன் சிலை இருப்பதோ? இது எங்களினப்
பண்பாட்டுக்கு அவமானமல்லவா! இதைக் கண்ட உனது
பக்தனவன் சித்தம் துடிப்பதைப் பாரடா! அவன் இரத்தம்
கொதிப்பதைப் பாரடா! அவர் தம் பித்தம் தெளிய வைத்து
சித்தம் தெளிவிப்பாய் சிங்கார வேலனே!

மாரியில் நீரோடிப் பாய்ந்த தெருவெல்லாம் கோடையில்
காய்ந்து கிடந்தாலும் ஊரின்; அத்தெருவெல்லாம்
உன்னழகுத் தேரோடும் போது மக்கள் வெள்ளம்
அலையென வந்து மோதுமே! பாரோடு ஒன்றித்து
ஊரோடு கூடி சீரோடு வாழ்ந்திருந்தோமே! சீரழிந்த
நிலை மாற்றி ஊரினிந்த நிலை போக்கி வேருடன்
சீருடன் வாழ வைப்பாய்! வேலனே! எங்கள் சீலனே!

சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP