மறைந்த கவிஞர் சு.வில்வரத்தினத்தை நினைவுகூரும் 'பாடிப்பறை'
பொய்யுடல் மறைந்தாலும் புகழுடல் கொண்டு வாழும் கவிதைச் சிற்பிகளுள் ஒருவரும், சு.வி. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவருமான, கவிஞர். சு.வில்வரத்தினம் மறைந்து ஐந்து ஆண்டுகள் கடந்து போயின.
அவர் தனது கலையுணர்வாலும் தோழமையுணர்வாலும் எங்களைக் கட்டிய கட்டுக்கள் காலத்தால் அழியாது இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. அவரது கவிதை வரிகள் மீளக்கொண்டுவரும் நினைவுகளில் இன்னமும் அவரின் வாழ்தலை உணரமுடிகின்றது.
ஈழத்தின் மிகச்சிறந்த தமிழ்க்கவிஞர்களில் ஒருவரான கவிஞர். சு.வில்வரத்தினத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி, 'பாடிப்பறை' கவித்துறை நிகழ்வு, அவரையும் அவர்தம் கவிதைகளையும் அவர்சார்ந்த நினைவுகளையும் எதிர்வரும் போயா விடுமுறையான, சனிக்கிழமை 10ஆம் திகதி காலை 10 மணிக்கு மீட்டிப் பார்க்கின்றது.
சமூக விஞ்ஞானக் கற்கை வட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முழுமதி (போயா) விடுமுறை தினம் அன்றும் 'பாடிப்பறை' என்றழைக்கப்படும் இலக்கிய நிகழ்வை நடத்தி வருகின்றது. இந்நிகழ்வில் முக்கியமாக, கவிதைகள் பிறந்த சூழல், கவிதைகள் மீதான விமர்சனம், கவிஞர்கள் பற்றிய பார்வை மற்றும் சமூகத்தில் கவிதையின் தாக்கம் ஆகிய விடயப்பரப்புகள் சார்ந்த உரைகள், துறைசார் விற்பன்னர்களைக் கொண்டு ஆற்றுவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, பாடல்கள் மற்றும் கவியரங்கம் ஆகியவையும் இடம்பெறும்.
இவ்வாண்டின் டிசம்பர் மாதத்திற்கான 'பாடிப்பறை' நிகழ்வானது, போயா விடுமுறையான எதிர்வரும் 10 - 12 - 2011 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, நடைபெறும். இது வெள்ளவத்தையில் ரொக்சி திரையரங்கத்திற்கு நேர் எதிரே, காலிவீதியில் உள்ள ஒழுங்கையில் அமைந்துள்ள, தேசிய கலை இலக்கியப் பேரவையில் இடம்பெறும். இந்நிகழ்வின், முக்கிய பகுதியாக கவிஞர். கருணாகரன் ஆற்றும் 'சு.வி.யைக் கண்டடைதல்' எனும் தலைப்பிலான ஆய்வுரை இடம்பெறும்.
கவிஞர்.சு.வில்வரத்தினத்தின் வாழ்வு, அவருடைய தோழமைப்பண்புகள், கவிதைகள், அவை எழுந்த சூழல், அக்கவிகள் சொல்லும் கருத்துகள் ஆகிய கூறுகளை உடைய ஆய்வுரையின் பின்னர் அது பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறும். சோ.முரளி, கவிஞரின் 'யாருடைய கால்கள்' எனும் கவிதை மீதான நயவுரையை ஆற்றுவார். கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்களுடைய 'விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்' எனும் கவிதையை, கவிஞர சடாகோபன் கவியாற்றுகை செய்யவுள்ளார்.
கவிஞர். ந.காண்டிபனின் தலைமையில், மறைந்த கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைகளில் இருந்து தொகுக்கப்பட்ட கவியரங்கம் நிகழ்வில் இடம்பெறும். ரா.வைஷ்ணவி, பவித்திரன், மார்க்ஸ் பிரபாகர் ஆகியோர் கவியரங்கத்தில் கலந்துகொள்கின்றனர்.
கவிதையும் சமூகமும் ஒன்றுசேரும் இந்நிகழ்வில், கலந்து சிறப்பிக்குமாறு, சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.
0 comments:
Post a Comment