Wednesday, December 21, 2011

எம் இதயங்களில் வாழும் 'சிவம் அக்கா'

அமரர் திருமதி சிவயோகலட்சுமி இரத்தினசபாபதி அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தைமுன்னிட்டு-திரு சி.பரிமளகாந்தன் அவர்களினால் வரையப்பட்ட சிறப்புக்கட்டுரை!
எம் இதயங்களில் வாழும் 'சிவம் அக்கா'
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்".(வள்ளுவம்)


'சிவம் அக்கா' இந்தப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் ஒருவித ஆனந்தம் பிறக்கிறது எங்களுக்கு. எங்களூராம் அல்லைப்பிட்டிக் கிராமத்தின் புகழ் பூத்த குடும்பமாம் 'உடையார் குடும்பத்தில்' வந்துதித்த ஒரு குலவிளக்கு எங்கள் சிவம் அக்கா என்றால் அது மிகையில்லை. எமது கிராமத்தின் அஞ்சல் அதிபராக பல தசாப்தங்கள் செவ்வனே பணிபுரிந்த அமரர்.திரு.இரத்தினசபாபதி அவர்களுக்கு வாய்த்த ஒரு போற்றுதலுக்குரிய இல்லத்தரசியாகவும், தன் பிள்ளைகளை மட்டுமன்றி, ஊரார் பிள்ளைகளையும் உயிராக, உறவாகப் பரிந்து பாசம் சொரிந்த அன்னையர் திலகமாகவும், அண்டை அயலாரால் மட்டுமன்றி, முழுக் கிராம மக்களாலும் ஏன் அயல் கிராம மக்களாலும் மதித்துப் போற்றப்பட்ட மாதரசி எங்கள் அனைவராலும் சிவம் அக்கா என அன்பாக அழைக்கப் பட்ட திருமதி.சிவயோகலட்சுமி இரத்தினசபாபதி அவர்கள் விண்ணுலகு ஏகினார் என்ற செய்தியறிந்து ஆறாத் துயர் அடைந்தோரில் நானும் ஒருவன்.அவரது முப்பத்தோராம் நாள்
  நினைவஞ்சலியை முன்னிட்டு இந்த இரங்கற் கட்டுரையை வடிக்கிறேன்.
எனக்கு அறிவு தெரிந்த காலம்தொட்டு எங்கள் அயலில் வாழ்ந்த மனிதருள் 'மாணிக்கம்' என்றால் அது எங்கள் சிவம் அக்கா அவர்கள் தான் என்பேன். தன் கணவரோடு இணைந்து, பார்த்தோர் வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டிய இல்லறமாகட்டும், அடுத்த மனிதருக்கு உதாரணத் தம்பதிகளாக இருந்து தங்கள் பிள்ளைகளைச் சீரோடும், சிறப்போடும், செம்மையாக வளர்த்த மனைமாட்சி ஆகட்டும். உற்றாருக்கு மட்டுமன்றி ஊராருக்கும் கைம்மாறு கருதாது நல்கிய உதவிகள் ஆகட்டும். அவருக்கு நிகர் அவரே.
எங்கள் ஊரில் 'உடையார் குடும்பத்திற்கு என்று ஒரு பூர்வீகப் பெருமை உள்ளது. அந்தப் பெருமையை இன்றளவும் கட்டிக் காத்து நிற்கும் உடையாரின் பிள்ளைகளில் எங்கள் சிவம் அக்காவின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது.
அவர் எங்கள் அயலவர் மட்டுமன்றி எனது தாயாரின் நீண்ட நாள் சிநேகிதி என்பதால் அவரது பெருமையை மட்டுமன்றி அவரது ஒவ்வொரு போற்றத் தக்க செயலையும் அருங் குணாதிசயங்களையும் நான் பார்த்து மகிழ்ந்தது மட்டுமன்றி வியந்தும் இருக்கிறேன். தகித்து வந்தோருக்குத் தண்ணீரும், பசித்து வந்தோருக்கு அன்னமும் அளிப்பதையே கடமையாகக் கொண்ட கைகள் சிவமக்காவின் கைகள். உடையார் குடும்பத்திற்கேயுரிய உயர்ந்த செய்கைகளில் ஒன்றான தான தருமங்களில் சிவமக்கா என்றைக்குமே பின்னுக்கு நின்றதில்லை. அவரது தர்மத்தின் பயனும், அவரது முன்னோர் செய்த நல்வினைப் பயனும் சேர்ந்து சிவமக்காவின் பிள்ளைகள் அனைவருமே மேலைத்தேய நாடுகளில் சீரோடும் சிறப்போடும், புகழோடும் வாழ்வதாக அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்கள் கிராமத்தில் உள்ள ஆலயங்களில் எமது வீட்டிற்கு அருகில் இருக்கும் இனிச்ச புளியடி முருகன் ஆலயத்தில் தினமும் பூசை நடைபெற வேண்டும் என்பதிலும், தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதிலும், அங்கு தினமும் மணியோசை கேட்கவேண்டும் என்பதிலும் அமரர்.செல்லத்துரை உடையாருக்கு அடுத்த படியாக அண்ணன் செ.நடேசபிள்ளை அவர்களைப்போல் எங்கள் சிவம் அக்காவும் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் அனுட்டிக்காத விரதங்களே இல்லை எனலாம். வருடா வருடம் எங்கள் ஊரில் ஆறு நாட்களில் தினமும் ஆறு மிளகு, ஆறு மிடறு தண்ணீருடன் கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஒரு சிலரில் சிவம் அக்காவும் ஒருவர். விரத காலத்தில் உடலில் எந்தவித தளர்ச்சியும் இல்லாது இனிச்ச புளியடி முருகன் ஆலயத்திற்கு வரும் சிவமக்காவிடம் கேட்பேன். உங்கள் பெற்றோர்கள் செய்த நல்வினைப் பயனும், புண்ணியங்களும் ஏழு தலைமுறையைக் காக்கும். நீங்களும் உடல் தளர்ந்து விரதங்கள் அனுட்டிக்க வேண்டுமா என்பேன். அவர் சொல்வார் அப்பனே! எங்கள் நல்வாழ்வு எங்கள் பெற்றோர் செய்த நல்வினையால் வந்தது என்றால், நாங்கள் செய்யும் நல்வினையும், சேர்த்த புண்ணியமும்தானே இனி வரும் எங்கள் தலைமுறையைக் காக்கும் என்பார். அவரது சிந்தனைத் தெளிவையும், தொலைநோக்குப்
பார்வையையும் கண்டு மெய் சிலிர்த்து நின்றேன். அவரது சந்ததிகள் என்றென்றைக்கும் எவ்வித குறையுமின்றி இனிதே வாழ்வார்கள் என்பது திண்ணம்.
பிரான்ஸ் நாட்டில் தனது பிள்ளைகளுடன் இறுதிக் காலத்தில் கவலையின்றி வாழ்ந்து வந்த சிவம் அக்கா அமரர் உலகு ஏகினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த துயர் அடைகிறேன். பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் சகிதம் நூறு வயதுவரை வாழ்ந்திருக்க வேண்டிய சிவம் அக்கா தனது எண்பத்தியோராவது வயதில் இறைவன் திருவடி நிழலை எய்தியமை நாமெல்லாம் விதியின் கைப்பாவைகள் என்பதை மறுபடியும் நமக்கு உணர்த்தி நிற்கிறது. அவர்தம் முப்பத்தியோராம் நாள் நினைவு அஞ்சலியை முன்னிட்டு அவர்தம் மறைவிற்கு எனது இதய அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
"
இன்பத்திலே பங்கு கொண்டால் புன்னகையால் நன்றி சொல்வோம்,
துன்பத்திலே பங்கு கொண்டால் கண்ணீரால் நன்றி சொல்வோம்,
வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்,
வார்த்தையின்றிப் போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்"
இங்ஙனம்
சி.பரிமளகாந்தன்
அஞ்சல் தரப்பிரிவு அலுவலர் (M.S.O)
பிரதம தபால் அலுவலகம்
யாழ்ப்பாணம்
இலங்கை
முன்னாள் முகவரி:2 ஆம் வட்டாரம்,
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம்.
இந்நாள் முகவரி: 422, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP