நினைவஞ்சலி: உயர். திருமதி .சிவயோகலட்சுமி இரத்தினசபாபதி
அமரர் உயர் திருமதி சிவயோகலட்சுமி இரத்த்தினசபாபதி அவர்களுக்கு,
உங்களுக்கு எனதும், எமது அல்லைப்ப்பிட்டி மக்களினதும்
அன்பான கண்ணீர் அஞ்சலிகள்!
அல்லையூரின் அன்பின் அரசியே! உங்கள் பிரிவு கண்டு துயரமடைகின்றேன். உங்கள் பெயரை ஒருமுறை
உச்சரித்துப் பார்க்கின்றேன். சிவயோகலட்சுமி! இப்பெயரை உங்கள் பெற்றோர் வைத்ததில் ஒரு
அர்த்தமே இருக்கிறது. இறையருள் கொண்டவர், யோகமானவர், அதிஸ்டமானவர் என்பதைச் சொல்கிறது.
ஒரு பெண் எப்படிப் பட்டவராக இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்! காரணங்கள் என்னிடம்
இருக்கின்றது!
அல்லைப்பிட்டியின் முதன்மைக் குடும்பத்தில் பிறந்த ஒரு யோகலட்சுமி நீங்கள் என்பதை, உங்கள்
குடும்பமும, மற்றும் யாவரும் அறிவார்கள். அங்கு வாழ்ந்தவன் என்ற முறையில், பல தடவைகள் உங்கள்
வீடு (தபால் கந்தோர்) வரும் போது சந்திரனைப் பார்ப்பது போல் உங்கள் முகம் பார்ப்பேன். உடனே
ஆனந்தமான அற்புதமான புன்முறுவலைக் காண்பேன், மகிழ்வேன்! இது உங்கள் பெயரில் உள்ள யோகமா!
அல்லது நல்ல பண்பாளரின் சொத்தா! அதை உங்களிடம் நான் 1986 வரை பார்த்தேன். எனது கிராமத்து
மக்களில் மறைந்திருக்கும் பண்பு, அன்பு என்பவற்றை கண்டு பெருமைப்படுவதுண்டு! இன்று அவை புலம்
பெயர்ந்தும், அழிந்தும், சிதறிப்போய்விட்டதே! இனி பழைய நினைவுகள் மீட்டு பார்க்க முடியாத அளவு
எமது கலாச்சார அடையாளங்களை, பண்பாடுகளை, உண்மை நேசத்தை எல்லாம் தொலைத்து விட்டோமே,
மீண்டும் வசந்தம் வருமா! எம்மண்ணின் பெருமை, பழைய நினைவுகளை மீட்போமா! என்று ஏங்கும் போது!
உங்கள் பிரிவு அல்லைப்பிட்டி வாழ்வை நினைத்து மீண்டும் ஏங்க வைக்கிறது!
நான் பிறந்தது முதல் வளர்ந்தது வரை நீங்கள் அறிவீர்கள், ஆனால் உங்களை நான் சில காலம்
அறிந்தேன்,பழகினேன். உங்கள் கையால் தேனீர் கூட தந்தீர்கள்! அந்த நேரம் உங்கள் முகத்தில் அன்பான
சிரிப்பு, உங்கள் அன்பான, அளப்பரிய, அற்புதமான, பணிவன்பான வார்த்தைகள் உதிர்ந்தன! உங்கள்
நெற்றியில் தெரியும் குங்குமமும், சந்தனமும், உங்கள் புண்முறுவலும் என்னை ஆட்சரியப்படுத்தியது.
உடையார் குடும்பம் என பலர் பெரிதாக கூறுவார்கள், ஆனால்! நீங்களும் சரி, உங்கள் கணவரும் சரி,
உங்கள் அண்ணர் தவவிநாயகம் ஜயா அவர்களும் சரி, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நடேசண்ணணும் சரி,
என்றும் பெருமை பாராட்டாது எம்மோடு அன்பாக பேசுவீர்களே ஏன்! நீங்கள் முதன்மைக் குடும்பம் தான்,
அதே நேரம் உயர்ந்த பண்புள்ள உயர்ந்த மனிதர்கள் என்பதை என்னால் மறக்க முடியவில்லை, என்றும்
அந்த நினைவுகள் பசுமையாகப் பதிந்திருக்கின்றது. நான் உங்கள் வீடுவரும் போது நீங்களும், உங்கள்
கணவரும் (மாஸ்ரர்) அன்போடு வரவேற்ற நிகழ்வை உங்கள் மகள் சொர்ணநாயகி அறிவார். உங்களில்
எனக்கிருக்கும் அன்பிற்கும், என்னில் நீங்கள் கொண்ட அன்பிற்கும் சாட்சிகள் இருந்தாலும், இன்று என்
கண்ணில் இருந்து விழும் கண்ணீருக்கு சாட்சியில்லாது அழுகின்றேன். நீங்கள் என் அன்பை அறிவீர்களா
அம்மா! உங்களைப் போன்ற அன்புள்ளவர்கள் இல்லாது இனி தவிக்கப்போகின்றோமே! உங்கள்
உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் எமது மனதை விட்டு, உங்கள் முகம் மறையாது, நீங்கள் எங்களை
விட்டு பிரிந்தாலும், ஒரு முறையாவது வானத்தில் நின்று என்னை வாழ்த்திவிடம்மா! உங்கள் அன்பான ஆசி
என் வாழ்நாள் வரை வாழ வைக்கும் வலிமை பெற்றதம்மா! உங்கள் பிரிவுகண்டு வருத்துகின்றேன்.
உங்களின் அன்பை நினைத்து பெருமிதமடைகின்றேன் . நாம் எமது ஊரில் வாழ்ந்த வாழ்க்கை
திருப்தியானது, நிறைவானது எனவே! உங்கள் அன்பிற்கு, பண்பிற்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக்
கொள்கின்றேன். அன்பாக வாழ்ந்தீர்கள் என்ற பதிவே போதுமம்மா! நன்றியம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
உங்கள் துயரால் வாடும் பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
இம்
அல்லையூர் அருள் தெய்வேந்த்திரன் குடும்பத்த்தினர் (சுவிஸ்சலாந்து )
அல்லைப்பிட்டி அருள் ஆனந்தன் (இத்தாலி)
அல்லைப்பிட்டி அருளானந்தம் குடும்பத்தினர் (கனடா)
0 comments:
Post a Comment