புங்குடுதீவு முனைப்புலவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புங்குடுதீவு முனைப்புலம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டே கிணற்றில் போடப்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் விசாரணைகளுக்காக கிணறு முற்றாக இறைக்கப்பட்டு தேடுதல்கல் இடம்பெற்றன. அப்போது பச்சைநிறமான சேலை மற்றும் அவரது ஆடைகள் என்பனவற்றை சடலத்தில் சேர்த்துக் கட்டி கல் ஒன்றினால் பெண்ணுடன் இணைத்து கிணற்றில் வீசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் இப் பெண்ணுடைய கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட அடையாளங்களும் காணப்பட்டுள்ளது. இப் பெண் பாலியல்வல்லுறவிற்குப் பின் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
இவ் விசாரனைகளை ஊர்காவற்துறை நீதவான் திருமதி ஜோய்மகிழ் மகாதேவன் ஆரம்பித்துள்ளார்.
2ம் இணைப்பு
கடந்த நவம்பர் மாதம் 16 ம் திகதி முதல் காணாமல் போயிருந்த நல்லூர் ஆனந்தா வித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய துரைராஜசிங்கம் உத்தமகுமாரி (வயது 40) என்பவருடைய சடலமே புங்குடுதீவு முனைப்புலவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதால் அதனை அடையாளம் காண முடியவில்லை. எனினும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணின் ஆடைகளைக் கொண்டு உறவினர்கள் சடலம் உத்தமகுமாரியுடையது என அடையாளம் காட்டினர்.
உத்தமகுமாரி நல்லூர் ஆனந்தாக் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தார். கடந்த நவம்பர் 16ஆம் திகதி வழமை போல் பணிக்குச் சென்ற அவர் பின்னர் காணாமல் போயிருந்தார் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
பாடசாலை முடிந்து இரண்டு மணியளவில் அவர் வெளியேறி உள்ளதற்கான பதிவுகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
அவர் காணாமல் போனமை தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புங்குடுதீவு முனைப்புலவில் பாழடைந்தகிணறு ஒன்றினுள் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதனை மீட்ட பொலிஸார், கல்லில் கட்டி கிணற்றினுள் போடப்பட்டிருந்த அப் பெண்ணின் ஆடைகளையும் மீட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஆடைகளை உறவினர்கள் நேற்று அடையாளம் காட்டினர்.
0 comments:
Post a Comment