புங்குடுதீவு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆராய்வு.
புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் மற்றும் மீன்வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஏற்கனவே புங்குடுதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அவரது யாழ். பணிமனையில் சந்தித்து தமது தேவைகள் கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தியிருந்த நிலையிலேயே அமைச்சர் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் காலை நேரடியாகவே அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார்.
ஐந்து சங்கங்களைச் சேர்ந்த சுமார் 900 அங்கத்தவர்கள் தொழில் புரியும் புங்குடுதீவு கடற்றொழிலாளர்களின் தாய்ச்சங்கமான புங்குடுதீவு மத்திய கடற்றொழிலாளர் சங்கத்தினரைச் சந்தித்த அமைச்சர் தேவானந்தா அவர்கள் கடற்றொழிலாளர்களுடன் விரிவாக கலந்துரையாடியதுடன் கடற்றொழில் செய்யும் பிரதேசம் மற்றும் படகுகள் என்பவற்றையும் பார்வையிட்டார். தற்சமயம் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் காணப்படாத போதிலும் இயற்கை அனர்த்தங்களினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்றொழிலாளர்கள் தற்போது நிலவி வரும் கடும்காற்று மழை காரணமான தொழில் செய்யமுடியாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளையும் அமைச்சருக்குக் காண்பித்தனர். மேலும் கடல்பகுதியெங்கும் நாட்டி வைத்திருந்த வலைகளில் பெரும்பாலானவை கடும் காற்று கடற்கொந்தளிப்பு காரணமாக சேதமடைந்திருந்ததையும் காண்பித்தனர். எனவே இயற்கை அனர்த்தம் என்ற வகையில் தமது வாழ்வாதார தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமென அவர்கள் அமைச்சர் டக்ளஸ் Nதுவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை அக்கறையுடன் செவிமடுத்ததுடன்; அவற்றை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். மற்றொருபுறம் புங்குடுதீவு மீன்வியாபாரிகளையும் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீன்வியாபாரிகளின் பிரச்சினைகளையும் கண்டறிந்தார். தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மீன்வியாபாரிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படும் புங்குடுதீவு மீன்சந்தையினை திருத்தி புனரமைத்து தருமாறும் வேண்டுகோள்விடுத்தனர். மீன்வியாபாரிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தேவானந்தா அவர்கள் விரைவிலேயே அதனை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் மற்றும் மீன் வியாபாரிகளை சந்தித்தது மட்டுமல்லாமல் அப்பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கால்நடையாகவே சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment