தேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று!!
காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான்.
இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது. அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும் செழுமை கொண்டது.
பின் நவீனத்துவ இலக்கியப் பரப்பில்
படைப்பாளிகள் மரணிக்கலாம்.
வில்வரின் மண் சுமக்கும் மானுடக் கவிகள்,
விடுதலை உணர்வு விரவிய மனவெளிகளில்,
வாழும் தத்துவம் கொண்டது.
மொழிக் களத்தில் பாமரப் புரிதலைப் புகுத்திய புதுக்கவிஞன். அவனது அனுபவத்திரட்சியில் பல்வேறு முகங்கள்,
பன்முக அர்த்தங்களுடன் இறுக்கப்பட்டிருந்தது.
இவனது விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும், சத்தியத்தின் சாட்சிகளாகின்றன.
துரத்தியடிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த வெட்ட வெளிதனில், தனியனாக நடக்கும் போது சுயத்தின் அர்த்தம் புரியும்.
அவ்வெளியில், வாழ்வின் அர்த்தங்களும், பண்பாட்டு விழுமியங்களும், உயிர் நிலைத் தத்துவங்களும், சூனியமாகிப் போகும்.
மூது}ர் கிழக்கிலிருந்து ஈச்சிலம்பற்றையை நோக்கி நகரும் மக்கள், எறிகணைகளாய் துரத்தப்பட்டு, வாகரையை நோக்கி ஓடும்போது கவிஞனின் கவிவரிகள் மறுபடியும் உயிர்ப்பிக்கும்.
பின்தொடரும் எறிகணை வீச்சுக்களால்
இடம் மாறி வாழும் மனிதர்களின்
மனச் சிதைவுகளைப் பதிவு செய்ய
வில்வன் இன்று இல்லை.
குண்டு வீச்சினால் அழிந்த,
மரக்கிளைகளைத் தேடி காற்று அலைகிறது.
கவிஞனின் கவிதையுள் கரைந்திருந்த காற்று,
வாகரையில் வீழ்த்தப்பட்ட
மனிதர்களின் உடலங்கள் மீது
சோகத்துடன் தலைகுனிந்து உரசிச் செல்கிறது.
படைப்பாளி இறந்தாலும்,
படைப்புக்கள் வாகரையில் வாழ்கிறது.
தலைகுனிந்து மண்பதித்த கால்களைத்
தரிசிக்கும் பொழுதே
தன்னிலை துலங்கும்.
நீள நடக்கின்றேன்…. என்கிற வில்வனின் கவிதையில் குறியீடாகத் தெரிவதும் இதுவே.
துயிலும் இல்ல விளக்கொளியின் முன்னால்,
தலைகுனியும் தத்துவமும் அதுவே.
இத்தலைகுனிவு வீர வணக்கம் மட்டுமல்ல.
புற உலகப் பார்வைதனை ஒரு கணம் நிறுத்தி,
சுயதரிசனம் கொள்வதே அதன் உள்ளார்ந்த வெளிப்பாடு.
குனிந்த பார்வையில் தென்பட்ட மண்ணில்தான்
தலைசிதறிய பிஞ்சுகளின்
உடலங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
கொலைக் களமாகிய வாகரையில்
மரண ஓலங்கள் காற்றோடு கலக்கின்றன.
பூக்களை உரசும் காற்றின் சுகந்தங்கள்,
காலத்தோடு கரைந்து விட்டது.
நிகழ்கால வாழ்வில் வீசும் காற்றும்
ஒட்டாத உறவுதான்.
மறுபடியும் உயிர்த்தெழும் மகரந்தங்கள்
பூக்காமல் கருகுகின்றன.
கவிஞருக்கென்ன…. பழையதை மீட்டி,
உதிரத்தை சிலிக்க வைத்துப் போய் விட்டான்.
சிதைவுகளுள் ஒளிந்து கொண்ட
வாழ்வினைத் தேடி
மனிதர்கள் வீறு கொண்டெழத் தொடங்கி விட்டனர்.
ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி,
உச்சத்தின் கட்டளைக்காய் காத்திருந்து,
உறவுகள் கொன்றொழிவதை
பல்லை நறுமியபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரு இளைஞன்.
தற்போது…..
இடமாறுதல்களும், ஓட்டப் பந்தயமும் அந்நியனால்
வரையப்பட்ட எல்லைக்குள்தான்.
தற்காலிக எல்லைக்குள் கட்டுண்டு இருக்கும்
காற்றின் அழுத்தம் விரிவடைந்து,
கனம் பெருகி, இன எல்லை வரை நீளும்.
சுதந்திரக் காற்றினை
எல்லை வரை அழைத்துச் செல்ல
போராட்டச் சக்திகளுடன் மக்களும் தயாராவெனக்
கவிஞன் எழுப்பும் கனதியான செய்தி காதில் விழுகின்றது.
விழி மூடும் போதும் கண்ணால் காற்றுக்குத் து}து விட்டான்.
காற்றானது,
அந்த மகரந்த மணிச் செய்தியினை
தேசியத்தின் ஆன்மாவிடம் சேர்த்து விட்டது.
இனி என்ன….
பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதை விழும்.
மண்ணில் புதுத் தளிர் துளிர் விடும்.
காற்று வரையும் காட்சிப் படிமங்கள்,
அழகுணர்வைப் புள்ளியாக்கும்.
அதுவரை….
தொலைத்த வாழ்வினை இவன் கவிதைக்குள் தேடுங்கள்.
உயிர்த்தெழும் காலம் வரும்.
விழிப்பென்பது
இரு விழிகளையும்
சேரத் திறந்து வைத்திருத்தல் அல்ல.
எதிரியைக் குறித்த கவனக் குவிப்பு
மட்டும் அல்ல்
தன்னுள் மையமிட்டெழும் உயிர்ப்பு…
வில்வரின் இக்கவிதையே, அவன்
வாழ்ந்ததற்கான சான்று.
சி. இதயச்சந்திரன்
0 comments:
Post a Comment