Sunday, December 22, 2013

தீவுப் பகுதிக்கு இரணை மடுக்குளத்தில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்காக பெரும் போராட்டம்

தீவுப் பகுதிக்கு இரணை மடுக்குளத்தில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்காக பெரும் போராட்டம் நடக்கிறது.
ஆனால், தீவுக்கு வெள்ளவத்தையிலிருந்து ஆட்களைக் கொண்டு வரவேண்டும் என்றே சொல்வேன்.
முந்தி ஒரு காலம் ஊர்காவற்றுறை, கரம்பன், நாவாந்துறை. வேலணை, புங்குடுதீவு, சரவணை போன்ற இடங்களில் எல்லாம் ஏராளம் குடும்பங்கள் இருந்தன.
பொழுதுபட்டால் ஊர்காவற்றுறைச் சந்தி கலகலப்பாகும்.
கொத்துரொட்டிக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.
தீவுப்பகுதி பஸ்கள் எப்பவும் ஒரு பக்கம் சரிந்து கொண்டே ஓடும். அந்த அளவுக்குப் பயணிகளால் அவை நிரம்பி வழியும்.
மாரியோடு புலரும் தை மாதத்தில் எங்கே பார்த்தாலும் புகையிலைத் தோட்டமும் வெங்காயப்பாத்திகளுமாகவே இருக்கும்.
தரவைகளில் எங்கே பார்த்தாலும் மாடுகள் மேயும்.
அந்த நாட்களில் தீவைப் பார்க்கக் கண்கோடி வேண்டும். அத்தனை அழகு.
இப்பொழுது தீவுக்குப் போனால், இதயத்தின் மேலே ஆரோ பென்னாம் பெரிய கல்லைத் தூக்கி வைத்தமாதிரி இருக்கிறது.
அந்த அளவுக்கு அங்கே எல்லாம் வெளிச்சு வெறிச்சோடிப்போயிருக்கு.
தீவுப்பகுதி ஆட்கள் எல்லாம் வெள்ளவத்தையில் இருக்கிறார்கள். அல்லது கொட்டாஞ்சேனையில். அல்லது வத்தளையில், தெகிவளையில், நீர்கொழும்பில்.
மிச்சப்பேர் யாழ்ப்பாணத்தில்.
சில குடும்பங்கள் வன்னியில்.
நாட்டுப்பிரச்சினையால் இடம்பெயர்ந்து போனவர்களில் பாதிப்பேர் இன்னும் ஊர் திரும்பவில்லை.
மிஞ்சிய பாதியில் பாதியாட்கள் புலம்பெயர்ந்து போய் விட்டார்கள். அப்படிப் போனவர்கள், போதாக்குறைக்கு ஊரிலிருந்தவர்களையும் அழைத்து விட்டார்கள். Veedu
இப்படியே எல்லாரும்போனால் ஊரிலே என்னதான் மிஞ்சும்?
கரம்பனில் ஒரு காலம் கொடிகட்டிப் பறந்தவர்களின் வீடுகள் எல்லாம் இப்ப காட்டுக்கொடிகள் படருது.
எல்லைவேலிக்காக ஒரு காலம் கோட்டுக்கு ஏறியவர்களின் காணிகள் தேடுவாரில்லாமல் கிடக்கின்றன.
பனம்பழத்துக்காகப் பங்குப் பிரச்சினைப்பட்டவர்களை எண்ணிப் பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது.
நாயுருவிப்பற்றைகள் வளர்ந்து பெரும்பாலான வீடுகளையும் தோட்டங்களையும் மூடிவிட்டன.
தனிநாயகம் அடிகளின் வீட்டைப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு மாரடைப்புத் தான் வரும்.
கா.பொ. இரத்தினத்தின் காரியாலயம் இருந்த வளவைப் பார்த்துக் கண்கலங்கினார் தமிழரசுக்கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர்.
அவருடைய பெருமூச்சு எழுந்து அருகேயிருக்கும் பனங்கூடலை எரிக்குமோ என்றஞ்சினேன்.
காவலூர் ஜெகநாதனின் வீட்டின் கதையும் அப்படித்தான்..
இதுதான் இன்றைய தீவின் நிலை.
இன்று தீவிலிருப்பவர்கள் உண்மையில் தியாகிகளே..!!
தங்களை அர்ப்பணித்தே இவர்கள் வாழ்கின்றார்கள்..!!
அந்த அளவுக்கு சனமில்லாத – சனநடமாட்டம் இல்லாத தீவில் வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது. அல்லது வாழ்ந்து சாதனை படைக்க வேண்டியிருக்கிறது.
இவ்வளவுக்கும் கடந்த காலத்தில் தீவுப்பகுதிக்கு செலவளிக்கப்பட்ட பணமோ, மற்றப் பிரதேசங்களோடு ஒப்பிடும்போது அளவுக்கு அதிகமானது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) தீவில் செல்வாக்காக இருந்த காலத்தில் அவர்களின் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவுக்கே கூடுதலான காசை ஒதுக்கியிருக்கிறார்கள்.
பிறகு டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்து கொண்டும் தீவுக்கே அதிகமாக காசை ஒதுக்கியிருக்கிறார்.
றோட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. மின்சாரம் வந்திருக்கிறது.
வீட்டுத்திட்டம்கூட வந்து பலரும் கல் வீடு கட்டியிருக்கிறார்கள்.
ஆனாலும் எல்லாச் சனங்களும் அங்கே திரும்பி வரவில்லை.
அதாவது பெரிய தலைகள் ஒன்றும் ஊர் திரும்பவில்லை.
இதில் ஆகப்பெரிய தலைகள் கனடா, லண்டன், அவுஸ்ரேலியா, பிரான்ஸ்… என்று தொலைதூரத்தில் போய் உறைந்து விட்டன.
அடுத்த தரத்திலுள்ள தலைகள் கொழும்பில் தங்கியுள்ளன.
அதற்கடுத்தவை வவுனியாவில், மிஞ்சியவை யாழ்ப்பாணத்தில்..
அப்படியென்றால் தீவில்?..
தீவில் இப்பொழுது காற்றும் வெளியும் காடும் புதருமே காட்சியளிக்கின்றன.
பாழடைந்த வீடுகள்…. சரிந்தும் உடைந்தும் காடு மண்டியும் இருக்கின்ற மதில்கள், இறைத்துப் புழங்காத பாழ்ங்கிணறுகள்….
தீவுப்பகுதிக்கு வருகின்ற தென்பகுதிச் சனங்களும் இல்லையென்றால் தீவில் பேய்தான் உறையும்.
இதை நினைக்க நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கு.
உயர்பாதுகாப்பு வலயம் ஊரில் இல்லை. அது எங்களின் மனதில்தான் என்று சொல்ல வேணும்.


 Source http://www.athirady.com

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP