Tuesday, May 21, 2013

குடும்பத்தை பிரிந்திருந்து வாகன விபத்தில் பலியான புங்குடுதீவு வயோதிபர் - சடலத்தை வாங்க மனைவி மறுப்பு!


யாழில் குடும்பத்தை விட்டு பிரிந்து பண்ணை பஸ் தரிப்பிலே வாழ்ந்து வந்த முதியவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் வயோதிபரின் சடலத்தை அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுப்பதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தனபாலசிங்கம் (வயது 68) என்ற வயோதிபர் உயிரிழந்துள்ளார். இவரின் சடலத்தை மனைவி உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

இச் சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வயோதிபர் நல்லூர் பகுதியில் வசிக்கும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து 13 வருடங்களாக யாழ். பண்ணை பஸ்தரிப்பு நிலையத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவதினமான நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வேலணையில் இருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று யாழ்ப்பாணச் சந்தியிலுள்ள தபால் நிலயத்திற்கு முன்னால் வைத்து குறித்த வயோதிபரை மோதியதில் அவர் கீழே விழுந்து பேருந்தின் சில்லில் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதித் திடீர் மரணவிசாரணை அதிகாரி நவசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

வயோதிபரின் சடலத்தை பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் வழங்க இருந்த நிலையில் வயோதிபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் சடலம் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP