புங்குடுதீவு எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா பாரிஸ் மாநகரில்.
ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 - ம் திகதி (11 - 12 - 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் (50, Place de Torcy, 75018 Paris - Marx Dormoy) நடைபெறவுள்ளது.
அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை 'மண் மறவா மனிதர்கள்" நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மார்க்சிச தத்துவ ஆசான் நா. சண்முகதாசன், தலித் இலக்கியப் பிதாமகர் எனத் தமிழக விமர்சகர்களாலும் போற்றப்படும் கே. டானியல், பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், இலங்கையிலும் சீனாவிலும் தமிழ்ப்பணியாற்றிய 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பி, அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம், ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை சி. இராமலிங்கம், பல்லாண்டுகள் பத்திரிகைத்துறையில் பணியாற்றிய எல்லோர்க்கும் இனிய மனிதன் ஆர். சிவகுருநாதன், அச்சக வித்தகர் செம்மல் ஆ. சுப்பிரமணியம், மருத்துவக் கலையில் இலக்கியத் தமிழ் கண்ட வித்தகன் விஸ்வபாரதி, தொண்டுக்கு ஒரு திரு எனப் போற்றப்பட்ட 'சர்வோதயம்" க. திருநாவுக்கரசு, மக்கள் மனம் நிறைந்த உயர் நிர்வாகி சி. சடாட்சரசண்முகதாஸ், புங்குடுதீவு பெற்ற தமிழறிஞர்களான வித்துவான் சி. ஆறுமுகம், வித்துவான் பொன். அ. கனகசபை, பண்டிதர் வீ. வ. நல்லதம்பி, கலாநிதி க. சிவராமலிங்கம், மற்றும் பெண்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்ட வேதவல்லி கந்தையா, கவிஞர் சு. வில்வரத்தினம் ஆகியோரின் ஒப்பரிய பணிகளை நூலாசிரியர் அனுபவ ரீதியாக அழகுறக் கூறியுள்ளதை இந்நூலில் காணலாம்.
'பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின்" ஆதரவில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் கலை இலக்கியப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் பலர் உரைநிகழ்த்துவர்.
கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்பு, சிறுவர் இலக்கிய நூல்கள் எனப் பதினாறு நூல்களை வி. ரி. இளங்கோவன் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment