Monday, February 3, 2014

பைந்தமிழிசை வல்லோன் பொன்.சுந்தரலிங்கம் !

ஐங்கரனே! ஆனைமுகத்தோனே! எங்கள் ஐயன் பொன் சுந்தரலிங்கனை அங்கையுள்
வைத்துக் காத்தருளி மங்காப் புகழோடு பைந்தமிழிசை வல்லோனாய் வையமெல்லாம் வலம் வரவே காப்பாய்!
புங்கையூரின் கீழ்த்திசையில் தோன்றிய ஐந்தமிழின் இசை விளக்கம்!
ஏழிசைக் கடலில் இசை நுணுக்கம் அறியாது தத்தளிப்பவருக்கு நீ கலங்கரை விளக்கம்!
பாடிப்பாடிப் பயிற்சிப் பட்டறையால் வந்தது. செந்தமிழிசை நாப்பழக்கம்
பண்டிதர்க்கு மட்டுமல்ல பாமரர்க்கும் புரியப் பாடுவதே உன் வழக்கம்!
விசையொடிந்த உள்ளங்கட்கு இசையால் ஒத்தடம் கொடுக்கும் இசை மருத்துவன் நீ!
உன்னினமும் உன் சனமும் உள்ளவரை உன் பண்ணிசை முழங்கும.; கண்ணசையும்
காலசையும் உன் பண்ணமுதக் குரலோசை காற்றெடுத்துச் சென்று எண் திசையும் தான்; கலக்கும்
அதைக் கேட்டு விண்ணுலகம் கீழிறங்கும்!
பருந்தும் அதன் நிழலும் விலகாமல்
இருப்பதைப் போல், ஏற்றத்தாழ்வுகளுடன்
இசை நுணுக்கம் படப்பாடுதலில் வல்லவன் நீ! செவிக்கு விருந்தாகும் நோய்க்கு மருந்தாகும்!
ஐந்தறிவு ஜீவன்களும் உன்னிசையில் மயங்கும்
மரம், செடி, கொடிகள் யாவும் செவியினைப் பெற்றவை போல் களிப்புடன் இயங்கும்!
நீயோ! உலகெங்கும் பாடிப் பறக்கும் தமிழிசைப் பறவை! நாமோ உன் சங்கீத சாகர மழை அருந்தும் சக்கரவாகப் பறவை!
உன் நுண்மாண் நுழை புலத்தில் இசைப்பாடம் பயின்ற இளைய பறவைகள் புலமெங்கும்
பாடித் திரிவதால் நின் புகழ் சிறக்கும்! தாய் போலிருந்து விடுதலை வீரத்தைச் சீராட்டி வளர்த்தவன் நீ!
தாயுமாகித் தமிழுமாகித் தமிழிசையுமாகித் தமிழ்த் தேசமுமாகி, வானம் உள்ளவரை
வையம் உள்ளவரை தானமும் தளையும் இருப்பது போல், உன் தமிழிசைக் கானமும் தழைத்தோங்கி அழியாப் புகழேந்தி உன் கிளைகளோடு வாழ்க நீடு வாழ்கவே!
மனமுவந்த வாழ்த்தினை வழங்கும்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.