Saturday, October 3, 2020

புங்குடுதீவு அர்ச்சகர் கொலை; 3 அர்ச்சகர்கள் கைது: கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை?

 


புங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெண் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் அச்சகரே கொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூசகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொலையில் ஈடுபட்டவர்கள் சிசிரிவி கமராக்களை புடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.

பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் என்பவர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கான அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


அத்துடன், பூசகரின் உதவியாளர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.